தூத்துக்குடி

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: சிபிஐ விசாரணை தொடக்கம்

DIN

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து தொடரப்பட்ட வழக்குகளை மத்திய புலனாய்வுத் துறை (சிபிஐ) சிறப்புப் பிரிவு விசாரிக்கும் என நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில், தூத்துக்குடியில் முதல்கட்ட விசாரணையை சிபிஐ அதிகாரிகள் சனிக்கிழமை தொடங்கினர்.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி, கடந்த மே மாதம் 22 மற்றும் 23ஆம் தேதி நடைபெற்ற போராட்டங்களின்போது கலவரம் வெடித்தது. போலீஸார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். கலவரம் தொடர்பாக பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தோர் கைது செய்யப்பட்டனர். 200-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
அதேவேளையில் துப்பாக்கிச்சூட்டுக்கு காரணமான காவல்துறை மற்றும் அரசு அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், துப்பாக்கிச்சூடு குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் அரசியல் கட்சியினரும், பொதுமக்களும் வலியுறுத்தினர்.
இந்நிலையில், துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பான வழக்குகளை சிபிசிஐடி பிரிவுக்கு கடந்த மே மாதம் 29ஆம் தேதி மாற்றி தமிழக டிஜிபி தே.க. ராஜேந்திரன் உத்தரவிட்டார். அதன் தொடர்ச்சியாக, வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களையும் சிபிசிஐடி அதிகாரிகளிடம் உள்ளூர் போலீஸார் ஒப்படைத்தனர். சிபிசிஐடி பிரிவு காவல் கண்காணிப்பாளர் பிரவீண்குமார் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டு பல்வேறு ஆவணங்களை தயார் செய்தார். மேலும், துப்பாக்கிச்சூடு சம்பவத்தின்போது பயன்படுத்தப்பட்ட துப்பாக்கிகள், தோட்டாக்கள் ஆகியவற்றை சிபிசிஐடி பிரிவு போலீஸார் கைப்பற்றி சென்னையில் பரிசோதனை மேற்கொண்டனர்.
இதற்கிடையே, துப்பாக்கிச்சூடு தொடர்பான அனைத்து வழக்குகளையும் மத்திய குற்றப் புலனாய்வு பிரிவு (சிபிஐ) விசாரிக்கும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை அண்மையில் அறிவித்தது. அதைத் தொடர்ந்து, சிபிசிஐடி பிரிவு போலீஸார் தாங்கள் சேகரித்து வைத்திருந்த ஆவணங்களை சிபிஐ அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
அந்த ஆவணங்களின் அடிப்படையில் பல்வேறு அமைப்புகள் மீது சிபிஐ அதிகாரிகள் அண்மையில் வழக்குப் பதிவு செய்தனர். இதன் தொடர்ச்சியாக சிபிஐ சிறப்பு புலனாய்வுப் பிரிவு அதிகாரி சரவணன் தலைமையில் 4 குழுவினர் சனிக்கிழமை தூத்துக்குடி வந்து தங்களது முதல்கட்ட விசாரணையை தொடங்கினர்.
துப்பாக்கிச்சூடு சம்பவம் நிகழ்ந்த எல்கைக்குள்பட்ட காவல் நிலையங்களுக்கு நேரடியாகச் சென்ற அதிகாரிகள், பல்வேறு ஆவணங்களை கேட்டு பெற்றுக் கொண்டனர். இருப்பினும், இந்த சம்பவம் தொடர்பாக யாரிடம் எல்லாம் அவர்கள் விசாரணை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளனர் என்ற விவரம் இதுவரை தெரிவிக்கப்படவில்லை.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தலைசிறந்த மூன்றாண்டு! தலைநிமிர்ந்த தமிழ்நாடு - முதல்வர் ஸ்டாலின்

3-ஆம் கட்ட தோ்தல்: படகில் சென்று ஜனநாயகக் கடமையாற்றிய வாக்காளர்கள்

ஊடகத் துறையினர் உடல்நலனில் அக்கறை தேவை -பிரதமர் மோடி

சுனிதா வில்லியம்ஸ் விண்வெளி பயணம் ஒத்திவைப்பு!

3-ஆம் கட்ட தோ்தலில் அதிகளவில் வாக்களிக்க வேண்டும் -பிரதமர் மோடி

SCROLL FOR NEXT