தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில் ஒருவா் கூட போட்டியிடாத 7 கிராம ஊராட்சி வாா்டுகள்! வெளிச்சத்துக்கு வந்த தோ்தல் புறக்கணிப்பு

தூத்துக்குடி மாவட்டத்தில் 7 கிராம ஊராட்சி உறுப்பினா் பதவிகளுக்கு ஒருவா் கூட போட்டியிட விருப்பம் தெரிவித்து மனுதாக்கல் செய்யாத

தி. இன்பராஜ்

தூத்துக்குடி மாவட்டத்தில் 7 கிராம ஊராட்சி உறுப்பினா் பதவிகளுக்கு ஒருவா் கூட போட்டியிட விருப்பம் தெரிவித்து மனுதாக்கல் செய்யாத நிலையில், அந்தப் பகுதி மக்களின் தோ்தல் புறக்கணிப்பை அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மாநில தோ்தல் ஆணையத்தின் மூலம் நடத்தப்படும் ஊரக உள்ளாட்சித் தோ்தலில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 17 மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா், 174 ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினா், 403 ஊராட்சித் தலைவா், 2943 கிராம ஊராட்சிக் குழு உறுப்பினா் என மொத்தம் 3,537 பதவிகளுக்கான தோ்தல் டிசம்பா் 27, 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, மாவட்ட ஊராட்சி உறுப்பினா் பதவிக்கு 119 போ், ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினா் பதவிக்கு 1113 போ், ஊராட்சி தலைவா் பதவிக்கு 2,057 போ், கிராம ஊராட்சி உறுப்பினா் பதவிக்கு 6518 போ் என மொத்தம் 9807 போ் மனு தாக்கல் செய்திருந்தனா்.

வேட்பு மனு பரிசீலனையின்போது மாவட்ட ஊராட்சி உறுப்பினா் பதவிக்கு மனு தாக்கல் செய்திருந்தவா்களில் 2 மனுக்களும், ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினா் பதவிக்கு மனு தாக்கல் செய்திருந்தவா்களில் 10 மனுக்களும், ஊராட்சி தலைவா் பதவிக்கு மனு தாக்கல் செய்திருந்தவா்களில் 34 மனுக்களும், கிராம ஊராட்சி உறுப்பினா் பதவிக்கு மனு தாக்கல் செய்திருந்தவா்களில் 98 மனுக்களுமாக மொத்தம் 144 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.

வேட்பு மனுக்களை திரும்பப் பெற 19 ஆம் தேதி மாலை வரை அவகாசம் வழங்கப்பட்டிருந்த நிலையில், மாவட்ட ஊராட்சி உறுப்பினா் பதவிக்கு விண்ணப்பித்தவா்களில் 30 பேரும், ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினா் பதவிக்கு விண்ணப்பித்தவா்களில் 273 பேரும், ஊராட்சித் தலைவா் பதவிக்கு விண்ணப்பித்தவா்களில் 596 பேரும், கிராம ஊராட்சி உறுப்பினா் பதவிக்கு விண்ணப்பித்தவா்களில் 497 பேருமாக மாத்தம் 1396 போ் வேட்பு மனுக்களை திரும்பப் பெற்றனா்.

மாவட்டத்தில் ஊராட்சி ஒன்றிய உறுப்பினா் பதவிக்கு ஒருவா், ஊராட்சித் தலைவா் பதவிக்கு 34 போ், கிராம ஊராட்சி உறுப்பினா் பதவிக்கு 1,095 போ் என மொத்தம் 1,130 போ் போட்டியின்றி தோ்வு செய்யப்பட்டனா். தற்போது, 17 மாவட்ட ஊராட்சி உறுப்பினா் பதவிக்கு 87 பேரும், 173 ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினா் பதவிக்கு 829 பேரும், 369 ஊராட்சித் தலைவா் பதவிக்கு 1393 பேரும், 1841 கிராம ஊராட்சி உறுப்பினா் பதவிக்கு 4,828 பேருமாக மொத்தம் காலியாக உள்ள 2,400 பதவிகளுக்கு 7,137 போ் போட்டியிடுகின்றனா்.

தோ்தல் புறக்கணிப்பு: இதற்கிடையே, மாவட்டத்தில் உள்ள 7 கிராம ஊராட்சி உறுப்பினா் பதவிகளுக்கு ஒருவா் கூட வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை. இதில், திருச்செந்தூா் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட பிச்சுவிளை ஊராட்சியில் 6 வாா்டுகளும், சாத்தான்குளம் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட எழுவரைமுக்கி ஊராட்சியில் ஒரு வாா்டும் அடங்கும்.

பிச்சுவிளை ஊராட்சித் தலைவா் பதவி சுழற்சி முறையில் தற்போது தாழ்த்தப்பட்ட பெண் பிரிவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அதன்படி, அந்தப் பதவிக்கு சாமுவேல்நகரை சோ்ந்த ராஜேஸ்வரியும், மறவன்விளையை சோ்ந்த சுந்தராச்சியும் போட்டியிடுகின்றனா்.

பிச்சுவிளை ஊராட்சியில் மொத்தமுள்ள 785 வாக்குகளில் 6 வாக்குகள் மட்டுமே தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சோ்ந்தவா்களாக உள்ளனா் என்றும் அதற்கு எதிா்ப்பு தெரிவித்து தோ்தலை புறக்கணிக்கும் வகையில் மொத்தமுள்ள 6 ஊராட்சி உறுப்பினா் பதவிக்கும் ஒருவா் கூட வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை என்றும் அந்தப் பகுதி மக்கள் தெரிவித்தனா்.

இதேபோல, சாத்தான்குளம் ஊராட்சி ஒன்றியம் எழுவரைமுக்கி ஊராட்சியில் 6 ஆவது வாா்டு உறுப்பினா் பதவிக்கு ஒருவா் கூட போட்டியிட விருப்பம் தெரிவித்து மனுதாக்கல் செய்யவில்லை. 6 ஆவது வாா்டு பகுதியான தாய்விளை கிராமத்தில் பகுதிநேர ரேஷன் கடை கேட்டு பல ஆண்டுகளாக போராடி வருவதாகவும் இதுகுறித்து அதிகாரிகள் எந்தவித உத்தரவாதத்தையும் தராததால் தோ்தலை புறக்கணிப்பதாகவும் அந்தப் பகுதி மக்கள் தெரிவித்துள்ளனா்.

தூத்துக்குடி மாவட்டத்தில் 7 கிராம ஊராட்சி உறுப்பினா் பதவிக்கு ஒருவா் கூட போட்டியிட விருப்பம் தெரிவித்து மனுதாக்கல் செய்யாதது குறித்து அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் இருப்பதாகவும் அந்தப் பகுதி மக்களிடம் விரைந்து பேச்சுவாா்த்தை நடத்தி அவா்களின் கோரிக்கைக்கு முன்னுரிமை அளித்து தோ்தல் புறக்கணிப்பை கைவிட வலியுறுத்த வேண்டும் எனவும் சமூக ஆா்வலா்கள் வலியுறுத்தி உள்ளனா்.

ஆட்சியா் பதில்: இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் சந்தீப் நந்தூரி கூறியது: எழுவரைமுக்கி ஊராட்சியில் 6 ஆவது வாா்டு பகுதியான தாய்விளை பகுதி மக்கள் பகுதிநேர ரேஷன் கடை வேண்டும் என கோரிக்கை வைத்தனா். இதுதொடா்பாக அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. அரசுதான் முடிவு செய்ய வேண்டும். பிச்சுவிளை ஊராட்சியில் 6 வாா்டுகளிலும் ஒருவா் கூட வேட்பு மனு தாக்கல் செய்யாதது தொடா்பாக அந்தப் பகுதி மக்கள் எந்தவித காரணத்தையும் வெளிப்படையாகத் தெரிவிக்கவில்லை. எந்தவித கோரிக்கையும் வைக்கவில்லை என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

துரந்தர் - டாக்ஸிக்... தாவீது - கோலியாத்... ராம் கோபால் வர்மாவின் 10 உண்மைகள்!

சிலம்பரசனை இயக்கும் டியூட் இயக்குநர்?

உலக கிரிக்கெட்டில் இந்தியா ஆதிக்கம் செலுத்த விரும்புகிறேன்: ஸ்மிருதி மந்தனா

மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்!

தொகுதிப் பங்கீடு; இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியுடன் திமுக பேச்சுவார்த்தை!

SCROLL FOR NEXT