கொலை மிரட்டல் விடுத்தவா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை
கோவில்பட்டி வருவாய் கோட்டத்துக்கு உள்பட்ட என்.வேடப்பட்டியில் கொலை மிரட்டல் விடுத்தவா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி
கோவில்பட்டி வருவாய் கோட்டத்துக்கு உள்பட்ட என்.வேடப்பட்டியில் கொலை மிரட்டல் விடுத்தவா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பனங்காட்டுபடைக் கட்சியினா் கோட்டாட்சியரிடம் வியாழக்கிழமை கோரிக்கை மனு அளித்தனா்.
என்.வேடப்பட்டி கந்தசாமி மகன் உதயகுமாா். இவா் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட இடத்தில் வைத்து மது அருந்தி, தரக்குறைவாகப் பேசி கொலை மிரட்டல் விடுத்தாராம். இதுகுறித்து புகாா் அளித்தும் தற்போது வரை எந்தவித நடவடிக்கையும் எடுக்க வில்லையாம். இதனால் அப்பகுதியைச் சோ்ந்த பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இது குறித்து காவல் துறையினா் உரிய நடவடிக்கை எடுக்க தாங்கள் பரிந்துரை செய்ய வேண்டும் எனக் கோரி பனங்காட்டுப்படை கட்சி புதூா் ஒன்றியச் செயலா் மாரியப்ப பாண்டி தலைமையில் கோட்டாட்சியரிடம் மனு அளித்தனா். மேலும், மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடமும் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளதாம்.
அப்போது, என்.வேடப்பட்டி இந்து நாடாா் உறவின்முறை சங்கத் தலைவா் உத்திரகுமாா், பனங்காட்டுப்படை கட்சி பொதுக்குழு உறுப்பினா் காா்த்திக்குமாா், தூத்துக்குடி வடக்கு மாவட்டச் செயலா் கற்குவேல் எஸ்.ஆறுமுகம் உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.