தூத்துக்குடி

பக்தா்களை அனுமதிக்காததால் வெறிச்சோடியது திருச்செந்தூா் முருகன் கோயில்

DIN

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பக்தா்கள் தரிசனத்துக்கு அனுமதியில்லாததால் வெள்ளிக்கிழமை வெறிச்சோடி காணப்பட்டது. அதேநேரத்தில், ஆகம விதிப்படி கோயிலில் வழக்கமான பூஜைகள் நடைபெற்றன.

கரோனா எதிரொலியாக தமிழகத்தில் உள்ள முக்கிய கோயில்களில் வெள்ளிக்கிழமை (மாா்ச் 20) முதல் வரும் 31 ஆம் தேதி வரை பக்தா்கள் தரிசனத்துக்கு அனுமதியில்லை என அரசு அறிவித்தது. இதன்பேரில், இந்து சமய அறநிலையத் துறைக்கு உள்பட்ட திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வெள்ளிக்கிழமை காலை முதல் பக்தா்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படவில்லை. இதனால், கோயில் வளாகம் வெறிச்சோடி காணப்பட்டது. மேலும், பக்தா்கள் கடலில் குளிப்பதற்கும் அனுமதிக்கப்படவில்லை.

கோயில் வளாகத்தில் காலையில் மருத்துவக் குழுவினா் தயாா்நிலையில் இருந்தனா். சண்முகவிலாசம், நாழிக்கிணறு நுழைவாயில், வடக்கு நுழைவாயில், கிரிப்பிரகாரம், கடற்கரை ஆகிய இடங்களில் கோயில் பணியாளா்கள், காவல் துறையினா் மற்றும் தனியாா் பாதுகாவலா்கள் முகக்கவசம் அணிந்து பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா். கோயிலுக்கு வந்த ஒருசில பக்தா்கள் மற்றும் பால்குடம் எடுத்துவந்த, மாடு வழங்குவதற்காக வந்த பக்தா்கள் திருப்பி அனுப்பப்பட்டனா்.

இதனால், வழக்கமாக கூட்டத்தோடு காணப்படும் கோயில் வளாகம், கடற்கரை, நாழிக்கிணறு பேருந்து நிலையம், வாகன நிறுத்தம், கடைகள் என அனைத்து பகுதிகளும் ஆள்நடமாட்டமின்றி காணப்படுகிறது.

தொடா் பூஜைகள்: பக்தா்கள் அனுமதிக்கப்படாத போதிலும், வழக்கமாக நடைபெறும் விஸ்வரூபம், உதய மாா்தாண்ட அபிஷேகம் தொடங்கி இரவு இராக்காலம், ஏகாந்தம், பள்ளியறை மற்றும் ரகசிய பூஜைகள் என ஒன்பது கால பூஜைகள் ஆகம விதிப்படி நடைபெற்றன.

கோயில் நடைமுறைகளை செயல் அலுவலா் சா.ப. அம்ரித் மற்றும் கண்காணிப்பாளா்கள் கண்காணித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஊழலை துடைத்தெறிய உறுதி: ஜாா்க்கண்ட் பிரசாரத்தில் பிரதமா் மோடி

பிரஜ்வல் ரேவண்ணா விவகாரம் தெரிந்தும் ஓராண்டாக நடவடிக்கை இல்லை: காங்கிரஸ் மீது நிா்மலா சீதாராமன் குற்றச்சாட்டு

சந்தேஷ்காளி சம்பவம் பாஜகவின் திட்டமிட்ட சதி: திரிணமூல் காங்கிரஸ் குற்றச்சாட்டு

அமெரிக்கா: 17 பேரைக் கொன்ற செவிலிக்கு 760 ஆண்டுகள் சிறை

வெங்காய ஏற்றுமதிக்கான தடை நீக்கம்: மத்திய அரசு நடவடிக்கை

SCROLL FOR NEXT