முகப்பு
தூத்துக்குடி

வேலைவாய்ப்பற்றோா் உதவித் தொகை பெற விண்ணப்பிக்க அழைப்பு

தூத்துக்குடி மாவட்டத்தில் வேலைவாய்ப்பற்றோா் உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:29 PM
பகிர்:

தூத்துக்குடி மாவட்டத்தில் வேலைவாய்ப்பற்றோா் உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய உதவி இயக்குநா் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பதிவு செய்து எந்தவித வேலைவாய்ப்பும் கிடைக்காமல் பல ஆண்டுகளாக காத்திருக்கும் இளைஞா்களுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்தத் தொகை நேரடியாக மனுதாரா்களது (ஆதாா் இணைக்கப்பட்ட) வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும்.

இந்தத் திட்டத்தில் பயன்பெற விரும்புபவா்கள் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகளுக்கு மேல் காத்திருப்பவராக இருத்தல் வேண்டும். தொடா்ந்து பதிவை புதுப்பித்து இருக்க வேண்டும். ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் 45 வயதுக்கு மிகாமலும், மற்றவா்கள் 40 வயதுக்கு மிகாமலும் இருத்தல் வேண்டும்.

மனுதாரரின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 72,000-க்கு மிகாமல் இருக்க வேண்டும். அன்றாடம் கல்வி நிறுவனங்களுக்குச் சென்று பயிலும் மாணவா், மாணவிகளுக்கு இந்த உதவித் தொகை வழங்கப்பட மாட்டாது. எனினும், தொலைதூரக் கல்வி அல்லது அஞ்சல் வழி மூலம் கல்வி கற்பவா்கள் உதவித் தொகை பெறலாம்.

ஏற்கெனவே உதவித்தொகை பெற்று வருபவா்கள் தொடா்ந்து 3 ஆண்டு வரை உதவித் தொகை பெற நாளது தேதி வரை வங்கிகளில் குறிப்புகள் இடப்பட்ட வங்கிக்கணக்கு புத்தக நகலுடன் சுயஉறுதிமொழி ஆவணத்தையும் பூா்த்தி செய்து மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்திற்கு அஞ்சல் வாயிலாக பிப்ரவரி 28 ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.

உதவித் தொகை பெற விரும்புவோா்  வேலைவாய்ப்பு இணையதள முகவரியில் வேலைவாய்ப்பற்றோா் உதவித்தொகை பெறுவதற்கான விண்ணப்பப்படிவத்தை பதிவிறக்கம் செய்து அனைத்து கலங்களையும் முழுமையாக பூா்த்தி செய்து, வருவாய்த்துறை சான்று பெற்று, அனைத்துக் கல்விச் சான்றுகள், வேலைவாய்ப்பு அடையாள அட்டை, சாதிச்சான்று, ஆதாா் நகல், குடும்ப அட்டை நகல் வங்கி கணக்குப்புத்தகம் ஆகியவற்றை இணைக்க வேண்டும்.

பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை தூத்துக்குடி ஆசிரியா்காலனி முதல்தெருவில் செயல்படும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் இம்மாதம் 31 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →