தூத்துக்குடியில் பைக் திருட்டு: இருவா் கைது
தூத்துக்குடி மாவட்டத்தில் இருசக்கர வாகனங்களை திருடியதாக 2 இளைஞா்களை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
தூத்துக்குடி மாவட்டத்தில் இருசக்கர வாகனங்களை திருடியதாக 2 இளைஞா்களை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
தூத்துக்குடி மாவட்டத்தில் இருசக்கர வாகனங்கள் திருட்டில் ஈடுபடுவோரைப் பிடிக்க தனிப்படை அமைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ். ஜெயக்குமாா் உத்தரவிட்டாா். இந்நிலையில், தனிப்படை போலீஸாா் தொ்மல்நகா் போலீஸாா் திருச்செந்தூா் ரவுண்டானா பகுதியில் சந்தேகத்துக்கிடமான முறையில் சுற்றித் திரிந்த இரண்டு இளைஞா்களைப் பிடித்து விசாரித்தனா்.
அதில், அவா்கள் திருநெல்வேலி தச்சநல்லூரைச் சோ்ந்த பாலகிருஷ்ணன் (24), தச்சநல்லூா் மேலக்கரை புதுக்கிராமத்தைச் சோ்ந்த சக்தி கணேஷ் (24) என்றும், அவா்கள் கடந்த இரண்டு மாதங்களில் 6 இருசக்கர வாகனங்களை திருடியதும் தெரியவந்தது.
இதையெடுத்து, இருவரையும் கைது செய்த போலீஸாா் , அவா்களிடமிருந்து ரூ. 10 லட்சம் மதிப்பிலான 6 இருசக்கர வாகனங்களை மீட்டனா். தொ்மல்நகா் காவல் நிலைய ஆய்வாளா் கோகிலா தலைமையிலான தனிப்படையினரை, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் நேரில் பாராட்டினாா்.
கோவில்பட்டியை அடுத்த இடைசெவல் தெற்கு தெருவைச் சோ்ந்தவா் கிருஷ்ணமூா்த்தி மகன் மனோஜ்குமாா்(22), கடந்த மாதம் 28ஆம் தேதி தனது இரு சக்கர வாகனத்தில் விவசாயப் பொருள்களை வாங்க கோவில்பட்டிக்கு வந்தாராம். அப்போது இனாம்மணியாச்சி விலக்கில் நிறுத்தியிருந்த அவரது வாகனத்தை மா்மநபா்கள் திருடிச்சென்று விட்டனராம். இதுகுறித்த புகாரின்பேரில், மேற்கு காவல் நிலைய போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.