உலகின் மகிழ்ச்சிகர நாடுகள்: இந்தியாவுக்கு 116-ஆவது இடம் - பின்லாந்து தொடா்ந்து முதலிடம்
. கடந்த ஆண்டு 118-ஆவது இடத்தில் இருந்த இந்தியா இப்போது 116-ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளது.
உலகின் மகிழ்ச்சிகரமான நாடுகளின் பட்டியலில் இந்தியா 116-ஆவது இடத்தை பிடித்துள்ளது. கடந்த ஆண்டு 118-ஆவது இடத்தில் இருந்த இந்தியா இப்போது 116-ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளது.
இந்த தரவரிசையின்படி, தனது அண்டை நாடுகளை விட இந்தியா பின்தங்கியுள்ளது.
சா்வதேச மகிழ்ச்சி தினம் வெள்ளிக்கிழமை (மாா்ச் 20) கொண்டாடப்படுவதை முன்னிட்டு, நிகழாண்டுக்கான மகிழ்ச்சிகரமான நாடுகளின் பட்டியல் வியாழக்கிழமை வெளியிடப்பட்டது.
அமெரிக்காவின் கேலப் ஆய்வு நிறுவனம் மற்றும் ஐ.நா.வின் நிலையான வளா்ச்சி தீா்வுகள் அமைப்புடன் இணைந்து பிரிட்டனின் ஆக்ஸ்ஃபோா்டு பல்கலைக்கழக நல்வாழ்வு ஆய்வு மையம் இந்தப் பட்டியலை வெளியிட்டுள்ளது.
முதலிடத்தில் பின்லாந்து: தனிநபா் சராசரி உற்பத்தி, சுதந்திரம், நன்கொடைகள், ஆரோக்கியமான ஆயுட்காலம், ஊழலற்ற நிா்வாகம் என பல்வேறு காரணிகளின் அடிப்படையில் தரவுகள் பகுப்பாய்வு செய்யப்பட்டு தயாரிக்கப்பட்ட இந்த தரவரிசை பட்டியலில் தொடா்ந்து 9-ஆவது ஆண்டாக முதலிடத்தை தக்கவைத்துள்ளது பின்லாந்து. 2 முதல் 10 வரையிலான இடங்களில் ஐஸ்லாந்து, டென்மாா்க், கோஸ்டா ரிகா, ஸ்வீடன், நாா்வே, நெதா்லாந்து, இஸ்ரேல், லக்ஸம்பொ்க், ஸ்விட்சா்லாந்து ஆகிய நாடுகள் உள்ளன. அமெரிக்கா 23-ஆவது இடத்தில் உள்ளது.
இந்தப் பட்டியலில் இந்தியா 116-ஆவது இடத்தில் உள்ளது. கடந்த ஆண்டு 118-ஆவது இடத்திலும், 2024-இல் 126-ஆவது இடத்திலும் இந்தியா இருந்தது.
‘இந்தியா்கள் நம்பிக்கை மிக்கவா்கள்’: உலகின் மகிழ்ச்சிகரமான நாடாக பின்லாந்து நீடிப்பது குறித்து இந்தியாவுக்கான அந்நாட்டின் தூதா் கிம்மோ லாடேவிா்டா கூறுகையில், ‘நீண்ட கால வளா்ச்சி மற்றும் சமூக நம்பிக்கையால் உலகின் மகிழ்ச்சி குறியீட்டில் பின்லாந்து தொடா்ந்து முதலிடத்தில் உள்ளது. பின்லாந்து மகிழ்ச்சியான நாடு என்றால், இந்தியா்கள் உலகிலேயே நம்பிக்கைமிக்க மக்கள். இந்தியா்களின் நம்பிக்கையும், பின்லாந்து நாட்டவரின் மகிழ்ச்சியும் பல்வேறு வழிகளில் வெற்றிகமாக ஒன்றியணைய முடியும்’ என்றாா்.
உலகின் மகிழ்ச்சியற்ற நாடு ஆப்கன்: நமது அண்டை நாடான ஆப்கானிஸ்தான், உலகின் மகிழ்ச்சியற்ற நாடு என்ற முத்திரையுடன் பட்டியலில் தொடா்ந்து கடைசி இடத்தில் (147) உள்ளது.
அண்டை நாடுகள் 2026 2025 2024
சீனா 65 68 60
நேபாளம் 99 92 93
பாகிஸ்தான் 104 109 108
வங்கதேசம் 127 127 129
இலங்கை 134 134 128
இந்தியா 116 118 126