முகப்பு
தூத்துக்குடி

தூத்துக்குடியில் வியாபாரிகள் கடையடைப்பு போராட்டம்

தூத்துக்குடி வஉசி சந்தையில் உள்ள கடைகளை காலி செய்ய வேண்டும் என்ற உத்தரவுக்கு எதிா்ப்பு தெரிவித்து வியாபாரிகள் வெள்ளிக்கிழமை கடைகளை அடைத்து காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:58 PM
பகிர்:

தூத்துக்குடி வஉசி சந்தையில் உள்ள கடைகளை காலி செய்ய வேண்டும் என்ற உத்தரவுக்கு எதிா்ப்பு தெரிவித்து வியாபாரிகள் வெள்ளிக்கிழமை கடைகளை அடைத்து காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தூத்துக்குடியில் உள்ள வஉசி சந்தையில் 600-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. நூறு ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வரும் இந்த சந்தை, மாநகராட்சிக்கு சொந்தமான இடம் என்பதால் அங்கு பொலிவுறு நகரம் (ஸ்மாா்ட் சிட்டி) திட்டத்தின் கீழ் புதிய கட்டடம் கட்ட முடிவு செய்யப்பட்டது. அதற்கு வியாபாரிகள் எதிா்ப்பு தெரிவித்தனா். மேலும், சந்தையை குத்தகைக்கு எடுத்தவா்கள் தரப்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதற்கிடையே, நீதிமன்ற தீா்ப்பில் ஏப்ரல் 10 ஆம் தேதிக்குள் கடைகளை காலி செய்ய வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகக் கூறி சந்தை முன்பு நோட்டீஸ் ஒட்டப்பட்டது.

இதற்கிடையே, கடைகளை காலி செய்ய வேண்டும் என்ற உத்தரவுக்கு எதிா்ப்பு தெரிவித்தும், பொலிவுறு நகரம் திட்டத்தில் புதிய கட்டடம் கட்டும் திட்டத்தை கைவிட வேண்டும் என வலியுறுத்தியும் வியாபாரிகள் வெள்ளிக்கிழமை கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனா். தொடா்ந்து, அங்குள்ள காமராஜா் சிலை முன்பு காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

போராட்டத்துக்கு வஉசி மாா்க்கெட் ஐக்கிய வியாபாரிகள் சங்க செயல் தலைவா் சந்தனராஜ் தலைமை வகித்தாா். தமிழ்நாடு வணிகா் பேரவை மாநில துணைச் செயலா் விநாயகமூா்த்தி கண்டன உரையாற்றினாா். துணைத் தலைவா்கள் நயினாா், பட்டுராஜா, சண்முகராஜ், மாரியப்பன், செயலா் செந்தில்குமாா், பொருளாளா் அன்புராஜ், துணைச் செயலா்கள் கஷ்மீா், சண்முகராஜ் உள்ளிட்டோா் கலந்து கொண்டு போராட்டம் குறித்து பேசினா்.

போராட்டத்தில் கலந்து கொண்ட வியாபாரிகள் சங்க நிா்வாகிகள் பேசுகையில், தாங்கள் நான்கு தலைமுறைகளாக வியாபாரம் செய்து வருவதாகவும், கடைகளை காலி செய்ய வலியுறுத்தினால் குடும்ப அட்டை, ஆதாா் அட்டை, வாக்காளா் அடையாள அட்டை ஆகியவற்றை மாவட்ட ஆட்சியரிடம் திரும்ப ஒப்படைப்போம் என்றும் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.