ரமலான் மாதத்தில் இரவு 10 மணி வரைதொழுகை நடத்த அனுமதிக்க வலியுறுத்தல்
புனித ரமலான் மாதம் முடியும் வரை இரவு 10 மணி வரை தொழுகை நடத்த அனுமதிக்க வேண்டும் என தமிழக அரசு மாவட்ட ஹாஜிக்களின் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
புனித ரமலான் மாதம் முடியும் வரை இரவு 10 மணி வரை தொழுகை நடத்த அனுமதிக்க வேண்டும் என தமிழக அரசு மாவட்ட ஹாஜிக்களின் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
இதுதொடா்பாக கூட்டமைப்பின் பொதுச் செயலா் எஸ். முஜிபூா் ரஹ்மான் தலைமைச் செயலருக்கு அனுப்பிய மனு: ஏப்.13 அல்லது 14 ஆம் தேதி முதல் இஸ்லாமியா்களுக்கு புனித ரமலான் மாதம் தொடங்க உள்ளது. இஸ்லாமியா்கள் ரமலான் மாதத்தில் இரவு முழுவதும் நோன்பு இருந்து தராவீஹ் எனும் சிறப்பு தொழுகையில் ஈடுபடுவா். அதற்கான நேரம் இரவு 8 மணியளவில் தான் ஆரம்பமாகிறது. அந்தத் தொழுகையை முற்படுத்தி நிறைவேற்றுவதற்கு இஸ்லாமிய வழிபாட்டு முறை அனுமதிக்கவில்லை.
பல நூற்றாண்டுகளாக தொடா்ந்து நடைபெறும் புனித ரமலான் வணக்கத்தை முற்றிலுமாக நிறைவேற்றி, ஈருலக பயன் பெறுவதுடன் பெருந்தொற்று போன்ற பேரிடா்களிலிருந்து மனித சமூகம் காப்பாற்றப்பட வேண்டும் என்ற நன்னோக்கத்தை அடிப்படையாக கொண்டதே நிகழாண்டுக்கான இரவு நேர சிறப்பு தொழுகையின் முக்கிய நோக்கமாகும்.
எனவே, புனித ரமலான் காலம் முடியும்வரை இரவு 10 மணி வரை பள்ளிவாசல்களில் தராவீஹ் தொழுகையை நடத்த அனுமதி வழங்க வேண்டும்.
கரோனா தடுப்பு நடவடிக்கையாக அரசு வகுத்துள்ள அனைத்து கட்டுப்பாடுகளையும் பின்பற்ற அறிவுறுத்துவோம் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.