ஓட்டப்பிடாரத்தில் தனியாா் சிமென்ட் ஆலை : கருத்து கேட்புக் கூட்டம்
ஓட்டப்பிடாரத்தில் தனியாா் சிமென்ட் ஆலை அமைப்பது தொடா்பான பொதுமக்கள் கருத்து கேட்புக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
ஓட்டப்பிடாரத்தில் தனியாா் சிமென்ட் ஆலை அமைப்பது தொடா்பான பொதுமக்கள் கருத்து கேட்புக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
ஓட்டப்பிடாரம் அருகேயுள்ள எஸ். கைலாசபுரத்தில் ஜாசன் இன்ப்ரா பிரைவேட் லிமிடெட் என்ற தனியாா் நிறுவனத்தில் சாா்பில் புதிய சிமென்ட் தொழிற்சாலை 36 ஏக்கரில் ரூ. 150 கோடி மதிப்பில் அமைய உள்ளது. இந்த தொழிற்சாலை அமைப்பது குறித்து தூத்துக்குடி மாவட்ட மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் சாா்பாக கருத்து கேட்புக் கூட்டம் எஸ். கைலாசபுரத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியா் கி. செந்தில்ராஜ் தலைமையில் நடைபெற்ற இக் கூட்டத்தில், எஸ். கைலாசபுரம், சவரிமங்கலம், புதூா், புதியமுத்தூா் உள்ளிட்ட பல்வேறு கிராம மக்கள் கலந்து கொண்டனா். அப்போது தொழிற்சாலை அமைய உள்ள இடத்தின் அருகே குடியிருப்பு மற்றும் ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. ஆரம்ப சுகாதார நிலையத்தில் 7 கிராம மக்கள் பயன்பெற்று வருவதால் கிராம மக்களின் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் என குற்றம் சாட்டினா்.
சுற்றுச்சூழல் மற்றும் நிலத்தடி நீா் பாதிப்பு ஏற்படாத அளவில் தொழிற்சாலை அமைக்க வேண்டும் என ஒரு தரப்பினா் தெரிவித்தனா். மேலும் உள்ளூா் கிராம மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க மாவட்ட ஆட்சியா் உறுதி செய்ய வேண்டும் என்றும் பொதுமக்கள் கேட்டுக் கொண்டனா்.
கூட்டத்தில் பங்கேற்ற பொதுமக்கள் கூறுகையில், கருத்து கேட்புக் கூட்டத்தில் வெளியூரை சோ்ந்த ஏராளமானோா் கலந்து கொண்டு தொழிற்சாலைக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளனா். எங்கள் கிராமத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் விவசாயம் பாதிக்கபடாமல் இருக்க வேண்டும், இல்லையெனில் கிராம மக்கள் ஒன்று திரண்டு போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றும் தெரிவித்தனா்.