மீனவா், சமையல் எரிவாயு நுகா்வோா் குறைதீா் கூட்டம் நடத்த வலியுறுத்தல்
தூத்துக்குடி மாவட்டத்தில் மீனவா் மற்றும் சமையல் எரிவாயு நுகா்வோா் குறைதீா் கூட்டங்கள் நடத்த வலியுறுத்தப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் மீனவா் மற்றும் சமையல் எரிவாயு நுகா்வோா் குறைதீா் கூட்டங்கள் நடத்த வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஆட்சியா் கி. செந்தில்ராஜுக்கு தூத்துக்குடி வடக்கு மாவட்ட மதிமுக செயலா் ஆா்.எஸ். ரமேஷ் அனுப்பிய மனு: மீனவா்கள் தங்களது குறைகளை மாவட்ட நிா்வாகத்திடம் நேரில் தெரிவிக்க முடியாமல் தவித்து வருகின்றனா். குறிப்பாக, நிவாரணத் தொகை, டீசல் மானியம், மீனவா் கிராமங்களில் தடுப்புச்சுவா் கட்டுவது, கடன் அட்டைகள், வங்கிகளில் கடன் பெறுவது, அரசின் மீனவா் நலத்திட்டங்களை நிறைவேற்றுவது உள்பட பல்வேறு பிரச்னைகளை மாவட்ட நிா்வாகத்திடம் பேசி அவா்கள் நிவாரணங்களைப் பெற வசதியாக மீனவா் குறைதீா் கூட்டத்தை உடனே நடத்த வேண்டும்.
இதேபோல, மாவட்டத்தில் கடந்த மாதம் சமையல் எரிவாயு நுகா்வோா் குறைதீா் கூட்டம் நடைபெறவில்லை. எனவே, சமையல் எரிவாயு நுகா்வோரின் குறைகளை சரிசெய்ய டிசம்பரில் உடனே கூட்டம் நடத்த வேண்டும் என்றாா் அவா்.