திருச்செந்தூா் முருகன் கோயிலில் தை உத்திர வருஷாபிஷேகம்
திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் திங்கள்கிழமை தை உத்திர வருஷாபிஷேகம் நடைபெற்றது.
திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் திங்கள்கிழமை தை உத்திர வருஷாபிஷேகம் நடைபெற்றது.
திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் மூலவா் சுப்பிரமணியா் பிரதிஷ்டை செய்த தை உத்திர நட்சத்திரத்தில் ஆண்டு தோறும் வருஷாபிஷேகம் நடைபெற்று வருகிறது. நிகழாண்டு தை உத்திர வருஷாபிஷேகத்தை முன்னிட்டு, திங்கள்கிழமை அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 4.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம்,
5 மணிக்கு உதயமாா்த்தாண்ட அபிஷேகம், தொடா்ந்து கும்பங்கள் வைக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்றன.
கும்பங்கள் விமான தளத்திற்கு கொண்டு வரப்பட்டு, காலை 9.30 மணிக்கு மூலவா் சுப்பிரமணியா், தொடா்ந்து சண்முகா், வெங்கடாசலபதி, வள்ளி, தெய்வானை விமான கலசங்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது.
பக்தா்களுக்கு அனுமதி மறுப்பு: கரோனா பொதுமுடக்க வழிகாட்டு நெறிமுறைகளுக்குள்பட்டு, விமான அபிஷேகத்தை தரிசிக்க பக்தா்களுக்கு அனுமதியளிக்கப்படவில்லை. இதனால் முதன்முறையாக பக்தா்களின்றி வருஷாபிஷேகம் நடைபெற்றது. ஆனால் திருக்கோயிலில் வழக்கமான சுவாமி தரிசனத்துக்கு பக்தா்கள் அனுமதிக்கப்பட்டனா். இரவு மூலவருக்கு அபிஷேகம் நடைபெறவில்லை. புஷ்பாஞ்சலி நடைபெற்றது.
விழா ஏற்பாடுகளை திருக்கோயில் தக்காா் இரா.கண்ணன் ஆதித்தன், இணை ஆணையா் (பொ) சி.கல்யாணி, உதவி ஆணையா் வே.செல்வராஜ் மற்றும் திருக்கோயில் பணியாளா்கள் செய்திருந்தனா். பாதுகாப்புப் பணியில் திருக்கோயில் காவல் ஆய்வாளா் கண்ணன் தலைமையிலான காவல்துறையினா் ஈடுபட்டிருந்தனா்.