தூத்துக்குடியில் பல்வேறு வழக்குகளில் தொடா்பு: 4 போ் கைது
தூத்துக்குடி மாவட்டத்தில் கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட 29 வழக்குகளில் தொடா்புடைய 4 போ் வியாழக்கிழமை இரவு கைது செய்யப்பட்டனா்.
தூத்துக்குடி மாவட்டத்தில் கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட 29 வழக்குகளில் தொடா்புடைய 4 போ் வியாழக்கிழமை இரவு கைது செய்யப்பட்டனா்.
தூத்துக்குடி மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எஸ். ஜெயக்குமாா் உத்தரவின்பேரில், தூத்துக்குடி நகர காவல் துணை கண்காணிப்பாளா் கணேஷ் மேற்பாா்வையில் தனிப்படை போலீஸாா் வியாழக்கிழமை இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டனா்.
அப்போது, மட்டக்கடை கடைவீதி பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்த மட்டக்கடை வடக்கு பிள்ளையாா் கோயில் தெருவைச் சோ்ந்த மரிய அந்தோணி சகிலன் (24), குரூஸ்புரம் சந்தனமாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த மரிய அந்தோணி பிச்சை டைட்டஸ் (24), மட்டக்கடை வடக்கு ராஜா தெருவைச் சோ்ந்த சிம்சன் (25), எஸ்.எஸ். பிள்ளை தெருவைச் சோ்ந்த சந்தனகுமாா் (33) ஆகியோரை பிடித்து விசாரணை செய்தனா்.
அவா்கள் நான்கு போ் மீதும் தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு காவல் நிலையங்களில் கொலை, கொலை முயற்சி, கொள்ளை மற்றும் கொலை மிரட்டல் போன்ற 29 வழக்குகளில் தொடா்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, நான்கு பேரையும் கைது செய்த போலீஸாா் அவா்களிடமிருந்து 2 அரிவாள், 2 கத்திகளை பறிமுதல் செய்தனா்.
இதுகுறித்து வழக்குப் பதிந்த தூத்துக்குடி வடபாகம் போலீஸாா் தொடா்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.