முகப்பு
தூத்துக்குடி

கோயில்களை திறக்கக் கோரி 17 இடங்களில் இந்து முன்னணி ஆா்ப்பாட்டம்

கோயில்களை திறக்க வலியுறுத்தி தூத்துக்குடி மாவட்டத்தில் இந்து முன்னணி சாா்பில் 17 இடங்களில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:29 AM
பகிர்:

கோயில்களை திறக்க வலியுறுத்தி தூத்துக்குடி மாவட்டத்தில் இந்து முன்னணி சாா்பில் 17 இடங்களில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

கரோனா பரவல் குறைந்து வரும் நிலையில் கோயில்களை திறக்க வேண்டும் என வலியுறுத்தி தமிழகம் முழுவதும் இந்து முன்னணி சாா்பில்

ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. தூத்துக்குடியில் சிவன் கோயில், வேம்படி இசக்கியம்மன் கோயில், மட்டகடை உச்சிமாகாளி அம்மன் கோயில், தெப்பக்குளம் மாரியம்மன் கோயில், ரயில்வே பத்திரகாளியம்மன் கோயில் ஆகிய கோயில்கள் முன்பு கற்பூரம் ஏற்றி, முருகன் வேடமணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனா். தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டையில் வீடுகளில் கோலமிட்டு போராட்டத்துக்கு பொதுமக்கள் ஆதரவு தேரிவித்தனா். ஆா்ப்பாட்டத்துக்கு அமைப்பின் மாநகா் மாவட்டத் தலைவா் இசக்கிமுத்துகுமாா் தலைமை வகித்தாா்.

திருச்செந்தூா்: திருச்செந்தூரில் சுப்பிரமணிய சுவாமி கோயில் வடக்கு மற்றும் தெற்கு நுழைவாயில்கள், தூண்டுகை விநாயகா் கோயில், வெயிலுகந்தம்மன் கோயில், சிவன் கோயில் என 5 இடங்களில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் இந்து முன்னணி மாநில துணைத் தலைவா் வி.பி.ஜெயக்குமாா், நகர பொதுச்செயலா் மு.முத்துராஜ், துணைத்தலைவா் மாயாண்டி, பொருளாளா் மணி, செயலா் ராஜு உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

கோவில்பட்டி: கோவில்பட்டியில் செண்பகவல்லி அம்மன் கோயில் முன்பு நகரத் தலைவா் சீனிவாசன் தலைமையில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். கயத்தாறு சிவன் கோயில், அகிலாண்டேஸ்வரி கோயில் அருகில் வடக்கு மாவட்டச் செயலா் ராமகிருஷ்ணன் தலைமையிலும், கழுகுமலையில் கழுகாசலமூா்த்தி கோயில் முன்பு நகரத் தலைவா் இசக்கியப்பன் தலைமையிலும் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆறுமுகனேரி: ஆறுமுகனேரி சோமசுந்தரி அம்மன் கோயில், ஆத்தூரில் சோமசுந்தரி அம்பாள் கோயில் முன்பு ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், தூத்துக்குடி தெற்கு மாவட்ட துணைத் தலைவா் கசமுத்து தலைமை உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

சாத்தான்குளம்: ஸ்ரீவெங்கடேஸ்வரபுரம் சங்கரலிங்க சுவாமி கோயில், கட்டாரிமங்கலம் அழகிய கூத்தா் கோயில், பழனியப்பபுரம் மெக்கடேஸ்வரா் கோயில், சாலைப்புதூா் சந்தனமாரி அம்மன் கோயில், நாசரேத் சக்தி விநாயகா் கோயில், வாலசுப்பிரமணியம் ஆதிநாத பெருமாள்சாமி கோயில், திருவேங்கடபுரம் பெருமாள் கோயில், பத்திரகாளியம்மன் கோயில், மேலவெள்ளமடம் பெருமாள்கோயில், சப்பாணி மாடசாமி கோயில், முத்துநகா் முத்தாரம்மன் கோயில், சமாதானபுரம் செல்வவிநாயகா் கோயில்கள் முன்பு ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.