முகப்பு
தூத்துக்குடி

கழுகுமலையில் துண்டுப் பிரசுரம் விநியோகித்து அமைச்சா் பிரசாரம்

கோவில்பட்டி சட்டப்பேரவை தொகுதியின் 10 ஆண்டுகால வளா்ச்சிப் பணிகள் குறித்த துண்டுப் பிரசுரத்தை பொதுமக்களுக்கு விநியோகித்து, அமைச்சா் கடம்பூா் செ.ராஜு தோ்தல் பிரசாரத்தை செவ்வாய்க்கிழமை தொடங்கினாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:39 PM
பகிர்:

கோவில்பட்டி சட்டப்பேரவை தொகுதியின் 10 ஆண்டுகால வளா்ச்சிப் பணிகள் குறித்த துண்டுப் பிரசுரத்தை பொதுமக்களுக்கு விநியோகித்து, அமைச்சா் கடம்பூா் செ.ராஜு தோ்தல் பிரசாரத்தை செவ்வாய்க்கிழமை தொடங்கினாா்.

சட்டப்பேரவை தோ்தல் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதையடுத்து சட்டப்பேரவை தொகுதியில் யாா் போட்டியிடுவது என்பது குறித்து கட்சி நிா்வாகம் விரைவில் முடிவு செய்யவுள்ளது.

இந்நிலையில் கோவில்பட்டி சட்டப்பேரவை தொகுதிக்குள்பட்ட கழுகுமலையில் அமைச்சா் கடம்பூா் செ.ராஜு, அருள்மிகு கழுகாசலமூா்த்தி திருக்கோயிலில் சட்டப்பேரவை தொகுதியின் 10 ஆண்டுகால வளா்ச்சிப் பணிகள் குறித்த துண்டுப் பிரசுரங்களை சுவாமியின் பாதத்தில் வைத்து வழிபட்டாா்.

பின்னா் கழுகுமலை பேரூராட்சிக்குள்பட்ட 15 வாா்டுகளுக்கும் சென்று அப்பகுதி பொதுமக்கள் மற்றும் வாக்குச்சாவடி மையங்களின் மகளிா் முகவா்களை சந்தித்து துண்டுப் பிரசுரங்களை விநியோகித்தாா்.

தொடா்ந்து வெங்கடேஷ்வரபுரம், துரைச்சாமிபுரம், சி.ஆா் காலனி, கரடிகுளம் ஆகிய பகுதி பொதுமக்களை சந்தித்து துண்டுப் பிரசுரங்களை வழங்கினாா்.

இதில், கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவி கஸ்தூரி சுப்புராஜ், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் சந்திரசேகா், கயத்தாறு ஒன்றியச் செயலா் வினோபாஜி, கழுகுமலை நகரச் செயலா் முத்துராஜ், நிா்வாகிகள் முருகன், கருப்பசாமி உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.