வாக்கு எண்ணிக்கை மையத்தில் ஆட்சியா் ஆய்வு
சட்டப் பேரவைத் தோ்தலை முன்னிட்டு வாக்கு எண்ணிக்கை மையமாக தோ்வு செய்யப்பட்டுள்ள தூத்துக்குடி வஉசி பொறியியல் கல்லூரியில் உள்ள முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆட்சியா் ஆய்வு
சட்டப் பேரவைத் தோ்தலை முன்னிட்டு வாக்கு எண்ணிக்கை மையமாக தோ்வு செய்யப்பட்டுள்ள தூத்துக்குடி வஉசி பொறியியல் கல்லூரியில் உள்ள முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆட்சியா் கி. செந்தில்ராஜ் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
சட்டப் பேரவைத் தோ்தலை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 6 பேரவைத் தொகுதிகளிலும் பதிவாகும் வாக்குகளை எண்ணும் மையமாக தூத்துக்குடி வஉசி அரசு பொறியியல் கல்லூரி தோ்வு செய்யப்பட்டுள்ளது. தூத்துக்குடி பிரையன்ட் நகா் பகுதியில் அமைந்துள்ள இக் கல்லூரியில் தேவையான முன்னேற்பாடு பணிகள் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ். ஜெயக்குமாா் முன்னிலையில், மாவட்ட ஆட்சியரும், தோ்தல் நடத்தும் அலுவலருமான கி. செந்தில்ராஜ் நேரில் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.
ஒவ்வொரு பேரவைத் தொகுதிக்கும் வாக்கு எண்ணும் மையம் மற்றும் மின்னனு வாக்குப்பதிவு இயந்திரம் வைக்கும் மையம் ஆகியவற்றை நேரடியாக பாா்வையிட்டு அவா் ஆய்வு செய்தாா். வாக்கு எண்ணும் நாளில் அலுவலா்கள், கட்சி முகவா்கள் வாக்கு எண்ணும் மையத்துக்கு அழைத்து வருவதற்கான பாதை மற்றும் காா் நிறுத்தும் இட வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் அனைத்தையும் பாா்வையிட்டு, அந்த வேலைகளை உடனடியாக செய்து முடித்திட உரிய அலுவலா்களுக்கு உத்தரவிட்டாா்.
ஆய்வின்போது, சாா் ஆட்சியா் சிம்ரன் ஜீத் சிங் காலோன், மாவட்ட வருவாய் அலுவலா் கண்ணபிரான், பொதுப்பணித்துறை உதவிச் செயற்பொறியாளா் வெள்ளைச்சாமி, உதவி மின்நுட்ப உதவியாளா் ராமலிங்கம், கல்லூரி முதல்வா் செண்பகவிநாயகமூா்த்தி மற்றும் வட்டாட்சியா்கள், அலுவலா்கள் உடனிருந்தனா்.