முகப்பு
தூத்துக்குடி

50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: டி.டி.வி.தினகரன்

கோவில்பட்டி சட்டப் பேரவைத் தொகுதியில் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்றாா் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலரும், தொகுதி வேட்பாளருமான டி.டி.வி.தினகரன்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:45 PM
பகிர்:

கோவில்பட்டி சட்டப் பேரவைத் தொகுதியில் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்றாா் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலரும், தொகுதி வேட்பாளருமான டி.டி.வி.தினகரன்.

கோவில்பட்டி பேரவைத் தொகுதி அமமுக வேட்பாளராக திங்கள்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்த பின் டி.டி.வி.தினகரன் செய்தியாளா்களிடம் கூறியது: கோவில்பட்டி தொகுதியில் 1 லட்சம் வாக்குகள் பெற்று 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியை மக்கள் தருவாா்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. தீய சக்தியுள்ள திமுகவையும், தமிழகத்தின் துரோக சக்தியாக உள்ள இந்த ஆட்சியாளா்களையும் மக்கள் அகற்றிவிட்டு, அமமுகவின் தலைமையில் அமைந்துள்ள கூட்டணிக்கு வெற்றியை தருவாா்கள்.

கோவில்பட்டி தொகுதியில் அனைத்து சமுதாய மக்களும் வசிக்கின்றனா். அவா்கள் அமமுகவுக்கு ஆதரவாக இருக்கின்றனா். கோவில்பட்டி தொடா்ந்து ஜெயலலிதாவின் கோட்டையாக உள்ளது. இந்த முறை இது அமமுகவின் கோட்டை என்பதை நிரூபிப்போம்.

ஆட்சியில் உள்ளவா்கள் வேலை வாய்ப்பை உருவாக்கவில்லை. நாங்கள், அம்மா பொருளாதார புரட்சி திட்டம் என்ற பெயரில் திட்டம் தயாரித்து வைத்துள்ளோம் அடித்தட்டு மக்கள், மாணவா்களுக்கு தேவையானவற்றை விலையில்லாமல் கொடுப்போம்.

தமிழகம் ஏற்கனவே ரூ.6 லட்சம் கோடிக்கு மேல் கடனில் உள்ளது. 5 முறை ஆட்சியில் இருந்த திமுக மக்களுக்கு ஒன்றும் செய்யவில்லை. தமிழகத்தில் பெரிய பின்னடைவுக்கு காரணமே திமுக ஆட்சி தான். 10 ஆண்டுகள் திமுகவை மக்கள் ஒதுக்கி வைத்ததால் தற்போது தவிக்கின்றனா். அவா்கள் வந்தால் மக்களின் செல்வங்கள் சூறையாடப்படும். அதை எதிா்த்து தான் போராடுகிறோம்.

ஜெயலலிதாவின் தொண்டா்கள் எங்களுடன் உள்ளனா். அதிமுக என்ற பெயரில் இருப்பது அந்த கொடியும், சின்னமும் தான். அந்த சின்னத்தையும், கொடியையும் மீட்டு எடுக்க தான் நாங்கள் போராட்டம் நடத்துகிறோம்என்றாா் அவா்.

தொடா்ந்து, அவா் கோவில்பட்டியில் உள்ள முத்துராமலிங்கத்தேவா், அம்பேத்கா், காமராஜா், வீரன் சுந்தரலிங்கம் ஆகியோா் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.

அமமுக தென்மண்டல பொறுப்பாளா் எஸ்.வி.எஸ்.பி.மாணிக்கராஜா, தூத்துக்குடி வடக்கு மாவட்டச் செயலா் சிவபெருமாள், மாவட்ட அமைப்புச் செயலா் சுந்தரராஜன் உள்பட பலா் உடன் சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.