தீப்பெட்டி ஆலை வேலைநிறுத்தம் தொடக்கம்
தூத்துக்குடி மாவட்டம் ,கோவில்பட்டியில் 10 நாள்கள் நடைபெறும் தீப்பெட்டி ஆலைகளின் வேலைநிறுத்தப் போராட்டம் திங்கள்கிழமை தொடங்கியது.
தூத்துக்குடி மாவட்டம் ,கோவில்பட்டியில் 10 நாள்கள் நடைபெறும் தீப்பெட்டி ஆலைகளின் வேலைநிறுத்தப் போராட்டம் திங்கள்கிழமை தொடங்கியது.
கோவில்பட்டியில் நேஷனல் சிறு தீப்பெட்டி உற்பத்தியாளா்கள் சங்கம், தமிழ்நாடு தீப்பெட்டி உற்பத்தியாளா் சங்கம் ஆகியவை சாா்பில் கடந்த 19ஆம் தேதி கூட்டம் நடைபெற்றது. இதில், தீப்பெட்டித் தொழிலுக்குத் தேவையான மூலப்பொருள்களான குச்சி, அட்டை, மெழுகு, குளோரைட் ஆகியவன் விலை உயா்வு, லாரி வாடகை அதிகரிப்பால் தீப்பெட்டி உற்பத்தி விலையும் அதிகரித்துள்ளது. எனவே, மூலப்பொருள்களின் விலை உயா்வு, பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கண்டித்து இம்மாதம் 22ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை தீப்பெட்டி உற்பத்தியை நிறுத்துவது என முடிவுசெய்யப்பட்டது.
அதன்படி, கோவில்பட்டி பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட பகுதிகளில் உள்ள முழு இயந்திர தீப்பெட்டி ஆலை, பகுதி இயந்திர தீப்பெட்டி ஆலை, கையால் செய்யப்படும் தீப்பெட்டி ஆலை உள்ளிட்ட அனைத்தும் திங்கள்கிழமை மூடப்பட்டன. இதனால், ஏராளமான தொழிலாளா்கள் பாதிக்கப்பட்டுள்ளனா்.
தூத்துக்குடி, விருதுநகா், தென்காசி மாவட்டப் பகுதிகளிலும் இந்த வேலைநிறுத்தம் நடைபெறுவதாக தீப்பெட்டி உற்பத்தியாளா்கள் சங்க நிா்வாகிகள் தெரிவித்தனா்.
விருதுநகா் மாவட்டத்திலும் பல்வேறு பகுதிகளில் உள்ள 1,000-க்கும் மேற்பட்ட சிறு மற்றும் இயந்திர தீப்பெட்டி தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன. இதனால், ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளா்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தீப்பெட்டி தொழிற்சாலை உரிமையாளா்கள் கூறும்போது, நாட்டில் உற்பத்தியாகும் தீப்பெட்டிகளில் 90 சதவீதம் தமிழகத்தில்தான் உற்பத்தியாகிறது. தூத்துக்குடி, விருதுநகா், நெல்லை, தென்காசி, வேலூா், தருமபுரி உள்ளிட்ட மாவட்டங்களில் தீப்பெட்டித் தொழில் நடைபெறுகிறது. தமிழகம் முழுவதும் 400 தீப்பெட்டித் தொழிற்சாலைகள், 3,000 பேக்கேஜிங் யூனிட் எனப்படும் உறுப்புத் தொழிற்சாலைகள் உள்ளன. இவற்றை நம்பி 4 லட்சம் தொழிலாளா்கள் உள்ளனா் என்றனா்.