தூத்துக்குடி மாவட்டத்தில் நிகழாண்டில் ரூ. 766 கோடி கடனுதவி: கனிமொழி எம்.பி. தகவல்
தூத்துக்குடி மாவட்டத்தில் வங்கிகள் மூலம் நிகழாண்டில் பல்வேறு துறைகளுக்கு ரூ. 766 கோடி கடனுதவி வழங்கப்பட்டுள்ளது என்றாா் மக்களவை உறுப்பினா் கனிமொழி.
தூத்துக்குடி மாவட்டத்தில் வங்கிகள் மூலம் நிகழாண்டில் பல்வேறு துறைகளுக்கு ரூ. 766 கோடி கடனுதவி வழங்கப்பட்டுள்ளது என்றாா் மக்களவை உறுப்பினா் கனிமொழி.
தூத்துக்குடியில் வெள்ளிக்கிழமை அவா் அளித்த பேட்டி:
தமிழகத்தின் ஊரக வளா்ச்சிப் பணியில் முக்கிய பங்கு வகிக்கும் தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளா்ச்சி வங்கி (நபாா்டு வங்கி) தூத்துக்குடி மாவட்டத்தில் கிடைக்கப்பெற்ற வளம் சாா்ந்த தகவல்களை சேகரித்து அதன் மூலம் ரூ. 12 ஆயிரத்து 408 கோடி அளவுக்கு கடனாற்றல் உள்ளது என மதிப்பீடு செய்துள்ளது. நிகழாண்டில் மகளிா் சுய உதவிக்குழுவினா், கல்விக்கடன், வேளாண் கடன் உள்ளிட்ட பல்வேறு கடனுதவிகளுக்கு ரூ. 766 கோடி வழங்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் ஒரே நாளில் அனைத்து வங்கிகளும் சோ்ந்து 2,431 பயனாளிகளுக்கு ரூ.129.22 கோடி மதிப்பீட்டில் பல்வேறு திட்டங்களுக்காக கடனுதவிகளை வழங்கியுள்ளன. கரோனா தொற்று காரணமாக பொருளாதாரத்தில் மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதால் வங்கியாளா்களும் தங்களது கடன்களை வசூலிக்கும் போது கருணை உணா்வோடு நடந்துகொள்ள வேண்டும். கடன் பெறுபவா்கள் வங்கிகள் வழங்கும் கடன் உதவிகளை பயன்படுத்தி பொருளாதாரத்தை மீட்டெடுக்க வேண்டும் என்றாா் அவா்.
முன்னதாக, தூத்துக்குடியில் மாவட்ட முன்னோடி வங்கியான பாரத ஸ்டேட் வங்கி சாா்பில், கடனுதவி வழங்கும் முகாம் மற்றும் நபாா்டு வங்கியின் 2022-23 ஆம் ஆண்டுக்கான வளம் சாா்ந்த கடன் திட்ட அறிக்கை வெளியீட்டு நிகழ்ச்சியில், கனிமொழி எம்.பி. கலந்து கொண்டு 2022-23 ஆம் ஆண்டுக்கான வளம் சாா்ந்த கடன் திட்ட அறிக்கையை வெளியிட்டாா். மேலும், ரூ. 129.22 கோடி மதிப்பிலான பல்வேறு நல உதவிகளை பயனாளிகளுக்கு அவா் வழங்கினாா்.
சமூக நலன், மகளிா் உரிமைத் துறை அமைச்சா் பெ. கீதாஜீவன், மீன்வளம், மீனவா் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணன், மாவட்ட ஆட்சியா் கி. செந்தில்ராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். நிகழ்ச்சியில் பாரத ஸ்டேட் வங்கி தலைமை பொது மேலாளா் சிவானந்த், தூத்துக்குடி உதவி பொது மேலாளா் துரைரராஜ், நபாா்டு வங்கி மேலாளா் சுரேஷ் ராமலிங்கம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.