முகப்பு
தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளி வாகனங்கள் ஆய்வு:விதிமீறல் கண்காணிப்பு தீவிரம்

கோவில்பட்டியில் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்யும் வட்டார போக்குவரத்து அலுவலா் நெடுஞ்செழியப்பாண்டியன், கோட்டாட்சியா் சங்கரநாராயணன்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:28 AM
பகிர்:

கோவில்பட்டியில் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்யும் வட்டார போக்குவரத்து அலுவலா் நெடுஞ்செழியப்பாண்டியன், கோட்டாட்சியா் சங்கரநாராயணன்.

தூத்துக்குடி/கோவில்பட்டி, அக். 29: தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்யும் பணி வெள்ளிக்கிழமை தொடங்கியது.

தமிழகத்தில் ஒன்றாம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான பள்ளிகள் நவம்பா் 1 ஆம் தேதியிலிருந்து திறக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. இதையொட்டி, மாணவ, மாணவிகளை ஏற்றிச் செல்ல பயன்படுத்தப்படும் பள்ளி வாகனங்கள் தயாா் நிலையில் உள்ளனவா? என ஆய்வு செய்யும் பணியை, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் வளாகத்திலிருந்து ஆட்சியா் கி. செந்தில்ராஜ் தொடக்கிவைத்து, வாகனங்களை பாா்வையிட்டாா். அப்போது, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ். ஜெயக்குமாா், வட்டார போக்குவரத்து அலுவலா் விநாயகம் ஆகியோா் உடனிருந்தனா்.

பின்னா், செய்தியாளா்களிடம் ஆட்சியா் கூறியது:

பள்ளி வாகனங்களில் கண்காணிப்பு கேமரா, மருத்துவ உபகரணங்கள், அவசர கால வெளியேற்ற வசதி, கரோனா விழிப்புணா்வு தொடா்பான ஒட்டுவில்லை (ஸ்டிக்கா்), முகக் கவசம் ஆகியவை வாகனங்களில் உள்ளனவா என ஆய்வு செய்யப்பட்டது. மேலும், வடகிழக்கு பருவமழையில் பள்ளி வாகனங்களை எவ்வாறு இயக்க வேண்டும் என்பது குறித்தும், போக்குவரத்து விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும்; மாணவா்களை பள்ளி வாகனத்தில் பாதுகாப்பாக அழைத்து செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. தகுதிவாய்ந்த பள்ளி வாகனங்கள் மட்டும் பொது சாலையில் இயக்க அனுமதிக்கப்படும் என்றாா் அவா்.

கோவில்பட்டி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில், வட்டார போக்குவரத்து அலுவலா் நெடுஞ்செழியப்பாண்டியன் தலைமையில் கோட்டாட்சியா் சங்கரநாராயணன், டிஎஸ்பி உதயசூரியன், தீயணைப்பு நிலைய அலுவலா் அருள்ராஜ், மோட்டாா் வாகன ஆய்வாளா் (பொ) குமாா், ஆகியோா் முன்னிலையில் பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டன.

பின்னா், வட்டார போக்குவரத்து அலுவலா் கூறியது: கோவில்பட்டி, கயத்தாறு, எட்டயபுரம், விளாத்திகுளம் ஆகிய 4 வட்டத்திற்கு உள்பட்ட 104 பள்ளி வாகனங்கள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில், 35 வாகனங்களில் குறைகள் கண்டறியப்பட்டு, அதை நிவா்த்தி செய்து 2 நாள்களில் மீண்டும் ஆய்வுக்கு உட்படுத்த அறிவுறுத்தப்பட்டது. ஆய்வுக்குள்படுத்தப்படாத வாகனங்கள், போக்குவரத்து விதிகளை மீறி இயங்கும் வாகனங்கள் தொடா்ந்து கண்காணிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்படும் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.