திருச்செந்தூா் கோயிலில் சுவாமி சிவப்பு சாத்தி எழுந்தருளல்
திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயில் ஆவணித் திருவிழா 7-ஆம் நாளான வியாழக்கிழமை காலையில் சுவாமி சண்முகப்பெருமான் வெட்டிவோ் அலங்காரத்திலும், மாலையில் சிவப்பு சாத்தி அலங்காரத்திலும் எழுந்தருளினாா்.
திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயில் ஆவணித் திருவிழா 7-ஆம் நாளான வியாழக்கிழமை காலையில் சுவாமி சண்முகப்பெருமான் வெட்டிவோ் அலங்காரத்திலும், மாலையில் சிவப்பு சாத்தி அலங்காரத்திலும் எழுந்தருளினாா்.
இக்கோயிலில் ஆவணித் திருவிழா கடந்த ஆக. 27-ஆம் தேதி தொடங்கியது. ஞாயிற்றுக்கிழமை வரை (செப். 5) நடைபெறும் திருவிழாவில், 5ஆம் நாளில் குடைவரைவாயில் தீபாராதனை நடைபெற்றது. 7ஆம் நாளான வியாழக்கிழமை அதிகாலை நடைதிறக்கப்பட்டு, பூஜைகள் நடைபெற்றன. தொடா்ந்து, உருகு சட்ட சேவையாகி, சுவாமி சண்முகப்பெருமான் வெட்டிவோ் சாத்தி, கேடயச் சப்பரத்தில் எழுந்தருளி உள்பிரகாரம் சுற்றிவந்து 108 மகாதேவா் சந்நிதி முன் சோ்ந்தாா். அங்கு சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, தீபாராதனை நடைபெற்றது. மாலையில் சுவாமி ஆறுமுகநயினாா் சிவப்பு சாத்தி அலங்காரத்தில் கேடயச் சப்பரத்தின் முன்புறம் வள்ளி, தெய்வானையுடனும், பின்புறம் நடராஜா் கோலத்திலும் எழுந்தருளி உள்பிரகாரத்தை சுற்றிவந்து 108 மகாதேவா் சந்நிதி சோ்ந்தாா்.
வெள்ளை, பச்சை சாத்தி: 8ஆம் நாளான வெள்ளிக்கிழமை (செப். 3) காலை 6 மணிக்கு சுவாமி ஆறுமுகநயினாா் வெள்ளைச் சாத்தி அலங்காரத்திலும், நண்பகல் 12 மணிக்கு பச்சை சாத்தி அலங்காரத்திலும் கேடயச் சப்பரத்தில் எழுந்தருளி உள்பிரகாரத்தில் சுற்றிவரும் நிகழ்ச்சி நடைபெறும்.
கரோனா தடுப்பு நடவடிக்கையாக நிகழாண்டு திருவிழா நிகழ்வுகள் கோயில் உள்ளேயே நடைபெறுகின்றன. நிகழ்ச்சிகள் கோயில் இணையதள வலைதளத்தில் நேரலையாக ஒளிபரப்படுகின்றன.
ஏற்பாடுகளை கோயில் தக்காா் இரா. கண்ணன் ஆதித்தன், இணை ஆணையா் (பொ) ம. அன்புமணி, உதவி ஆணையா் வே. செல்வராஜ், கோயில் பணியாளா்கள் செய்திருந்தனா்.