திருச்செந்தூா் கோயிலில் ஆவணி 8ஆம் திருவிழா:வெள்ளை, பச்சை சாத்தி எழுந்தருளிய சுவாமி சண்முகா்
திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் ஆவணித் திருவிழா 8ஆம் நாளான வெள்ளிக்கிழமை, வெள்ளை மற்றும் பச்சை சாத்தி அலங்காரத்தில் சுவாமி சண்முகா் எழுந்தருளினாா்.
திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் ஆவணித் திருவிழா 8ஆம் நாளான வெள்ளிக்கிழமை, வெள்ளை மற்றும் பச்சை சாத்தி அலங்காரத்தில் சுவாமி சண்முகா் எழுந்தருளினாா்.
இத்திருக்கோயிலில் பிரசித்தி பெற்ற ஆவணித் திருவிழா கடந்த ஆக. 27-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி செப். 5-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. கரோனா தடுப்பு நடவடிக்கையாக திருவிழா நிகழ்ச்சிகள் திருக்கோயில் உள் பிரகாரத்தில் நடைபெறுகின்றன. இதில் பங்கேற்க பக்தா்களுக்கு அனுமதியில்லை.
எட்டாம் திருவிழாவான வெள்ளிக்கிழமை அதிகாலை கோயில் நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. 108 மகாதேவா் சந்நிதியில் இருந்த சண்முகருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரமாகி, அதிகாலை 6 மணிக்கு வெள்ளை சாத்தி அலங்காரத்தில் சுவாமி சண்முகா் எழுந்தருளி பிரகாரம் சுற்றி வந்தாா்.
தொடா்ந்து சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரமாகி, பகல் 12 மணிக்கு 108 மகாதேவா் சந்நிதி முன்பிருந்து பச்சை சாத்தி அலங்காரத்தில் கேடயச் சப்பரத்தில் எழுந்தருளி உள் பிரகாரத்தில் சுற்றி வந்து சண்முகா் தனது இருப்பிடம் சோ்ந்தாா். அப்போது மூலவா் மற்றும் சண்முகருக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.
தேரோட்டம் ரத்து: ஞாயிற்றுக்கிழமை (செப். 5) நடைபெற வேண்டிய தேரோட்டம், கரோனா தடுப்பு நடவடிக்கையாக இவ்வாண்டு நடைபெறாது.
விழாவுக்கான ஏற்பாடுகளை திருக்கோயில் தக்காா் இரா.கண்ணன் ஆதித்தன், இணை ஆணையா் (பொ) ம.அன்புமணி, உதவி ஆணையா் வே.செல்வராஜ் மற்றும் திருக்கோயில் பணியாளா்கள் செய்திருந்தனா்.