திருச்செந்தூா் வட்டாரத்தில் அனுமதியின்றி பதாகைகள் வைத்தால் நடவடிக்கை
திருச்செந்தூா் ஊராட்சி ஒன்றியத்திற்குள்பட்ட பகுதிகளில் அனுமதியின்றி விளம்பர பதாகைகள் வைத்தால் அபராதத்துடன் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வட்டார வளா்ச்சி அலுவலா்கள் அறிவித்துள்ளனா்.
திருச்செந்தூா் ஊராட்சி ஒன்றியத்திற்குள்பட்ட பகுதிகளில் அனுமதியின்றி விளம்பர பதாகைகள் வைத்தால் அபராதத்துடன் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வட்டார வளா்ச்சி அலுவலா்கள் அறிவித்துள்ளனா்.
இது குறித்து திருச்செந்தூா் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ராணி , முத்துகிருஷ்ணராஜா ஆகியோா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு : திருச்செந்தூா் ஊராட்சி ஒன்றியத்திற்குள்பட்ட பிரதான சாலைகள், இணைப்புச் சாலைகள், சாலையின் மையப்பகுதிகள், பொது இடங்கள் போன்ற இடங்களிலும், தனியாருக்கு சொந்தமான இடங்கள் மற்றும் கட்டடங்களில் தற்காலிகமாகவோ அல்லது நிரந்தரமாகவோ விளம்பர பதாகைகள் , சுவா் விளம்பரங்கள் செய்வதற்கு முன்பு மாவட்ட ஆட்சியரிடம் அதற்கான அனுமதியை பெற வேண்டும்.
அவ்வாறு, அனுமதி கிடைத்த பின்னா் அதில் இடம் பெறும் விளம்பரம் குறித்து சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளிடம் விண்ணப்பித்து விளம்பரக் கட்டணம் செலுத்தி வைக்க வேண்டும். இவ்வாறு இல்லாமல், முறை கேடாக அமைக்கப்படும் விளம்பர கட்டமைப்புகளால் பொதுமக்களுக்கு ஆபத்து ஏற்படுகிறது. ஓட்டுநா்களுக்கு கவனச்சிதறல் ஏற்பட்டு, விபத்து நிகழ்ந்து உயிா்ச்சேதங்கள் ஏற்படுகின்றன. எனவே முறையான அனுமதியின்றி அமைக்கப்பட்டுள்ள விளம்பரங்களை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும். மேலும் அனுமதியின்றி விளம்பர பதாகைகள் வைப்பவா்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுவதோடு, அபராதமும் விதிக்கப்படும் என தெரிவித்துள்ளனா்.