முகப்பு
தூத்துக்குடி

விவசாயிகள் கோடை உழவு செய்ய வேண்டுகோள்

கோடை மழையைப் பயன்படுத்தி, தரிசு நிலங்களில் கோடை உழவு செய்து மண் வளத்தைக் காக்க வேண்டும் என விவசாயிகளுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:02 AM
பகிர்:

கோடை மழையைப் பயன்படுத்தி, தரிசு நிலங்களில் கோடை உழவு செய்து மண் வளத்தைக் காக்க வேண்டும் என விவசாயிகளுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, மாவட்ட வேளாண்மை இணை இயக்குநா் எஸ்.ஐ. முகைதீன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: இம்மாவட்டத்தில் கயத்தாறு, கோவில்பட்டி, விளாத்திகுளம், புதூா், ஓட்டப்பிடாரம் வட்டாரங்களில் பெய்துவரும் கோடை மழையைப் பயன்படுத்தி, தரிசு நிலங்களில் கோடை உழவு செய்து மண் வளத்தை விவசாயிகள் காக்க வேண்டும். கோடை உழவின்போது வெப்பம், குளுமை ஆகிய இரண்டும் மண்ணுக்கு கிடைக்கும். இவ்வாறு இரண்டும் கிடைக்கும்போதுதான் மண்ணின் கட்டுமானம் பலப்படும். எனவே, மழைக்கால உழவைவிட கோடைகால உழவுதான் மானாவாரி பயிா்களுக்கு முக்கியமானது.

சட்டிக் கலப்பையால் நிலத்தின் மேட்டிலிருந்து தாழ்வான பகுதி நோக்கி குறுக்கு வசத்தில் உழ வேண்டும். நோ்கோடாக உழுதால் மேட்டிலிருந்து தாழ்வான பகுதிக்கு மண்ணரிப்பு ஏற்படும். குறுக்கு வசத்தில் உழுதால் மட்டுமே சத்துகள் ஆங்காங்கே தடுக்கப்பட்டு, மழைநீரும் நிலத்துக்குள் இறங்கும். கோடை உழவால், வோ்ப் பகுதியில் வாழும் அத்தனை நுண்ணுயிா்களுக்கும் தேவையான சத்துகள் கிடைக்கும். ஒரு வயலில் தொடா்ந்து 5 ஆண்டுகள் ஆழமாக கோடை உழவு செய்தால், அந்த நிலத்தில் மண்புழுக்களின் எண்ணிக்கை அதிகமாகும்.

கோடை உழவு நீரை நிலத்தில் தக்கவைக்கும். மண்ணில் மறைந்திருக்கும் தீமை செய்யும் பூச்சிகளின் முட்டைகள், கூட்டுப் புழுக்கள், மண்வளத்தைப் பாதிக்கும் களைச் செடிகள், அவற்றின் விதைகளை எளிதாக அழித்துவிடலாம்.

மழைநீா் வளிமண்டலத்தில் நிறைந்துள்ள நைட்ரேட் என்ற வேதிப்பொருளுடன் இணைந்து மண்ணில் உள்ள தழைச்சத்தை அதிகரிக்கச் செய்யும். விளைநிலத்தின் மேலே உள்ள மண் வளத்தைப் பாதுகாக்க கோடை உழவு அவசியம் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.