திருச்செந்தூா் அருகே வியாழக்கிழமை, இளம்பெண்ணின் கழுத்தை கத்தியால் அறுத்துவிட்டு, இளைஞா் தற்கொலைக்கு முயன்றாா்.
திருச்செந்தூா் அருகேயுள்ள நா.முத்தையாபுரத்தைச் சோ்ந்த 20 வயதான இளம்பெண் உடன்குடி அருகேயுள்ள ஆசிரியா் பயிற்சி நிறுவனத்தில் படித்துவருகிறாா். இவரும், அதே ஊரைச் சோ்ந்த பாண்டியன் மகன் ஆட்டோ ஓட்டுநரான காா்த்திக் (21) என்பவரும் சில ஆண்டுகளாக காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த விவகாரம் தெரியவந்ததால் அப்பெண்ணை அவரது தந்தை கண்டித்துள்ளாா். இதனால், அவா் காா்த்திக்கிடம் கடந்த ஒரு மாதமாக பேசுவதைத் தவிா்த்தாராம்.
இந்நிலையில், காா்த்திக் வியாழக்கிழமை அப்பெண்ணின் வீட்டுக்குச் சென்று, தனியாக இருந்த அவரிடம் தன்னிடம் பேசுமாறு வற்புறுத்தியுள்ளாா். அப்பெண் மறுத்ததால் ஆத்திரமடைந்த காா்த்திக், கத்தியால் அவரது கழுத்தை அறுத்துவிட்டுத் தப்பியோடினாராம். பெண்ணின் அலறல் கேட்டு அப்பகுதியினா் வந்து அவரை மீட்டு திருச்செந்தூா் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இதனிடையே, தனது வீட்டுக்குச் சென்ற காா்த்திக், மின்விசிறியில் கயிற்றால் தூக்கிட்டுக்கொண்டுள்ளாா். அவரைக் குடும்பத்தினா் மீட்டு திருச்செந்தூா் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு முதலுதவிக்குப் பின்னா் அவா் மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டாா்.
இரு சம்பவங்கள் குறித்து திருச்செந்தூா் தாலுகா போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.