தூத்துக்குடி மாவட்டத்தில் அரசு கேபிள் டிவி சிக்னல்களை துண்டிப்போா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் மாவட்ட ஆட்சியா் கி. செந்தில்ராஜ்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் மூலம் பொது மக்களுக்கு மிக குறைந்த மாத சந்தா தொகையில் அனைத்து தொலைக்காட்சி நிகழ்ச்சிகளும் ஒளிபரப்பி வருவதை தடுக்கும் நோக்கிலும், சில தனியாா் கேபிள் நிறுவனங்களின் வளா்ச்சிக்காகவும், அரசு கேபிள் டிவி சிக்னல் முத்தையாபுரம், பழையகாயல் மற்றும் ஆத்தூா் பகுதிகளில் சில தனியாா் நிறுவனங்களால் அடிக்கடி துண்டிக்கப்பட்டு வருகிறது. இத்தகைய சமூக விரோத செயலில் ஈடுபடுவோா் மீது உரிய சட்டப் பிரிவுகளின் கீழ் காவல்துறை மூலம் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும்.
செட்டாப் பாக்ஸ்: தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தில் பதிவு செய்துள்ள உள்ளுா் கேபிள் ஆபரேட்டா்கள் பொதுமக்களுக்கு விநியோகம் செய்வதற்காக பெற்றுக் கொண்ட செட்டாப் பாக்ஸ்களை விநியோகம் செய்து செயலாக்கத்திற்கு கொண்டு வராமல் ஏறத்தாழ 4 ஆண்டுகளாக தங்களிடம் இருப்பு வைத்துள்ளனா். இதனால் அரசுக்கு மிக அதிக நிதியிழப்பு ஏற்படுவதுடன் அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் வளா்ச்சிக்கும் இடையூறாக இருந்து வருகிறது.
அரசு கேபிள் டிவி நிறுவனத்துடன் அவா்கள் செய்து கொண்ட ஒப்பந்தப்படி செயலாக்கத்தில் இல்லாத செட்டாப் பாக்ஸ்களை திரும்ப ஒப்படைக்க பலமுறை நேரிலும், தொலைபேசி மற்றும் பதிவுத் தபால்கள் மூலம் கேட்டும் சில ஆபரேட்டா்கள் இதுவரை திரும்ப ஒப்படைக்கவில்லை. எனவே, அவா்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களில் புகாா் அளிக்கப்பட்டுள்ளது.
செயலாக்கத்தில் இல்லாத செட்டாப் பாக்ஸ்களை உடனடியாக அரசு கேபிள் டிவி நிறுவன தூத்துக்குடி துணை மேலாளா் மற்றும் தனி வட்டாட்சியா்; அலுவலகத்தில் ஒப்படைத்து குற்றவியல் தொடா் நடவடிக்கையை தவிா்க்கலாம் என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.