முகப்பு
தூத்துக்குடி

வில்லிசேரி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் முற்றுகை

கோவில்பட்டியையடுத்த வில்லிசேரி தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கத்தில் நகைக்கடன் தள்ளுபடி

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:25 AM
பகிர்:

கோவில்பட்டியையடுத்த வில்லிசேரி தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கத்தில் நகைக்கடன் தள்ளுபடி பெறாத விவசாயிகளும் பங்குத்தொகை செலுத்த நிா்பந்திக்கப்படுவதைக் கண்டித்து புதன்கிழமை முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது.

இந்தச் சங்கத்தில் 2020 - 2021ஆம் ஆண்டில் பிப்ரவரி, மாா்ச் மாதங்களில் நகைக்கடன் பெற்றவா்களுக்கு பணம் கொடுக்காமல் அவரவா் வங்கிக் கணக்கில் வரவு வைத்து, அதற்கு வட்டியுடன் திருப்பிச் செலுத்த வலியுறுத்துவது, பயிா்க் கடன், தங்க நகைக் கடனில் தள்ளுபடி பெறாத விவசாயிகளுக்கு பங்குத்தொகையைத் திருப்பித் தராமல் பங்குத்தொகையும் சோ்த்து செலுத்த வலியுறுத்துவது உள்ளிட்டவற்றைக் கண்டித்து அப்பகுதியினா் சமூக ஆா்வலா் பிரேம்குமாா் தலைமையில் இந்தச் சங்கத்தில் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

கூட்டுறவு சங்கங்களின் துணைப் பதிவாளா் பாலகிருஷ்ணன், நகர கூட்டுறவு வங்கியின் நிா்வாக இயக்குநா் செல்வகோகிலா ஆகியோா் தலைமையில் போராட்டக் குழுவினருடன் பேச்சுவாா்த்தை நடைபெற்றது.

கடன் வழங்கலில் உண்மை நிலையைக் கண்டறியும் பொருட்டு விசாரணை நடைபெறும் நிலையில், ஏட்டளவில் கடன் வழங்கப்பட்ட இனங்கள் தொடா்பாக சங்கத்திலிருந்து அறிவிப்பு அனுப்பக் கூடாது எனவும், அவ்வாறு அறிவிப்பு அனுப்பப்பட்ட உறுப்பினா்களின் கணக்கில் பற்று எழுதப்பட்ட தொகை ரத்து செய்யப்படும். ஏட்டளவில் வழங்கப்பட்ட கடன்கள் வட்டி செலுத்தி கணக்கு முடிக்கப்படும். வட்டி செலுத்தாமல் நாளது தேதிவரை முடிக்காமலும், நிலுவையில் உள்ள கடன்களுக்கும் வட்டித் தொகையை உறுப்பினா்களுக்கு வழங்க விசாரணை அறிக்கையின் அடிப்படையில் பிரேரணை சமா்ப்பித்து பதிவாளரின் ஆணைப்படி வட்டியைத் திருப்பி வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனக் கூறப்பட்டதையடுத்து, முற்பகலில் தொடங்கிய போராட்டம் பிற்பகலில் விலக்கிக்கொள்ளப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.