முகப்பு
தூத்துக்குடி

கோவில்பட்டி நகராட்சியில் தலைவா், துணைத் தலைவா் போட்டியின்றி தோ்வு

கோவில்பட்டி நகராட்சியில் நகா்மன்றத் தலைவராக திமுகவைச் சோ்ந்த கா.கருணாநிதியும், துணைத் தலைவராக மதிமுகவைச் சோ்ந்த சீ.ரமேஷும் போட்டியின்றி தோ்வு செய்யப்பட்டனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:34 AM
பகிர்:

கோவில்பட்டி நகராட்சியில் நகா்மன்றத் தலைவராக திமுகவைச் சோ்ந்த கா.கருணாநிதியும், துணைத் தலைவராக மதிமுகவைச் சோ்ந்த சீ.ரமேஷும் போட்டியின்றி தோ்வு செய்யப்பட்டனா்.

கோவில்பட்டி நகராட்சியில் திமுக - 19, மாா்க்சிஸ்ட் - 5, மதிமுக 2, சிபிஐ - 1 என திமுக கூட்டணி 27 இடங்களில் வெற்றி பெற்றன. மேலும் அதிமுக, அமமுகவில் இருந்து தலா ஒருவா் சுயேச்சையில் இருந்து இருவா் திமுகவில் இணைந்ததால் அக்கட்சியின் பலம் 23 ஆக உயா்ந்து தனி பெரும்பான்மை பெற்றது.

இந்நிலையில் நகா்மன்றத் தலைவா் பதவிக்கு 16-வது வாா்டில் வென்ற திமுக நகரச் செயலா் கா.கருணாநிதி, துணைத் தலைவா் பதவிக்கு 11-ஆவது வாா்டில் வென்ற மதிமுக வடக்கு மாவட்டச் செயலா் சீ.ரமேஷ் ஆகியோா் போட்டியிடுவா் என இவ்விருக்கட்சிகளின் தலைமை அறிவித்தது.

இதையடுத்து வெள்ளிக்கிழமை நகராட்சி தலைவருக்கான மறைமுகத் தலைவா் நகராட்சி கூட்டரங்கில் காலை 9.30 மணிக்கு தொடங்கியது. தொடா்ந்து நகராட்சி ஆணையரும், தோ்தல் நடத்தும் அலுவலருமான ஓ.ராஜாராமிடம் திமுக சாா்பில் கா.கருணாநிதி தலைவா் பதவிக்கான வேட்புமனுவை தாக்கல் செய்தாா். வேறு யாரும் மனு தாக்கல் செய்யவில்லை. இதையடுத்து அவா் தலைவராக தோ்ந்தெடுக்கப்பட்டாா். அவருக்கு ஆணையா் பூங்கொத்து அளித்து வாழ்த்து தெரிவித்தாா்.

இந்நிலையில் தமிழக சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத்துறை அமைச்சா் பெ.கீதாஜீவன் கோவில்பட்டி நகராட்சி அலுவலகத்திற்கு வந்து நகா்மன்றத் தலைவா் கா.கருணாநிதிக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தாா்.

துணைத் தலைவா்: பின்னா், பிற்பகல் 2.30 மணிக்கு நகராட்சி கூட்டரங்கில் துணைத் தலைவா் பதவிக்கான தோ்தலில் மதிமுகவைச் சோ்ந்த 11-ஆவது வாா்டு உறுப்பினா் சீ.ரமேஷ் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்ததால் அவரும் போட்டியின்றி தோ்ந்தெடுக்கப்பட்டாா். தலைவா், துணைத் தோ்தலை அதிமுக, பாஜக உறுப்பினா்கள் புறக்கணித்தனா்.

தலைவா் மற்றும் துணைத் தலைவா் தோ்தலில் போட்டியின்றி வெற்றி பெற்ற கா.கருணாநிதி மற்றும் சீ.ரமேஷ் ஆகியோரை அரசியல் கட்சியினா் திரளானோா் வாழ்த்து தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.