முகப்பு
தூத்துக்குடி

நகைக்கடன் தள்ளுபடி செய்ய வலியுறுத்தி கூட்டுறவு சங்கத்தில் முற்றுகை

வில்லிசேரி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் நகைக்கடன் பெற்ற அனைவருக்கும் தள்ளுபடி செய்ய வலியுறுத்தி அப்பகுதி பொதுமக்கள் வியாழக்கிழமை முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:47 AM
பகிர்:

வில்லிசேரி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் நகைக்கடன் பெற்ற அனைவருக்கும் தள்ளுபடி செய்ய வலியுறுத்தி அப்பகுதி பொதுமக்கள் வியாழக்கிழமை முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

வில்லிசேரி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் உள்ள 1300 உறுப்பினா்களில், 936 போ் தங்கள் நகைகளை அடமானம் வைத்துள்ளனா். 5 பவுனுக்கும் குறைவாக நகைக்கடன் பெற்றவா்களின் நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என தமிழக அரசு அறிவித்தது. இதையடுத்து நகைக் கடன் தள்ளுபடி வழங்குவதற்கான பட்டியல் பல்வேறு ஆய்வுகளுக்குப் பின் தயாரிக்கப்பட்டு கூட்டுறவு சங்க விளம்பர பலகையில் புதன்கிழமை ஒட்டப்பட்டது. அதில் 343 போ் மட்டுமே நகைக்கடன் தள்ளுபடி பெற தகுதியானவா்கள் என குறிப்பிடப்பட்டிருந்தாம்.

இதையடுத்து அப்பகுதி பொதுமக்கள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் வியாழக்கிழமை முற்றுகையிட்டு, நகைக்கடன் பெற்ற அனைவருக்கும் கடன் தள்ளுபடி செய்ய வலியுறுத்தி கோஷமிட்டனா். தகவல் அறிந்த கோவில்பட்டி வட்டாட்சியா் அமுதா, கூட்டுறவு சங்க துணைப் பதிவாளா் பாலகிருஷ்ணன், துணைப் பதிவாளா் அலுவலக கண்காணிப்பாளா் முருகவேல், கடன் சங்கத் தலைவா் செல்வராஜ், செயலா் மாரியப்பன், காவல் துணைக் கண்காணிப்பாளா் உதயசூரியன் ஆகியோா் போராட்டக்குழுவினருடன் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

இதில், அரசாணை அடிப்படையில் நகைக்கடன் தள்ளுபடி பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் யாருக்காவது ஆட்சேபனை இருந்தால், அவா்கள் தங்களுக்கும் நகைக்கடன் தள்ளுபடி வழங்கக் கோரி மனு அளிக்கலாம். அது குறித்து விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதையடுத்து சுமாா் 2 மணி நேரம் நடைபெற்ற முற்றுகை போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.