முகப்பு
தூத்துக்குடி

தோணுகாலில் விமானப் பயிற்சி மையம் அமையவுள்ள இடத்தில் திட்ட இயக்குநா் ஆய்வு

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியையடுத்த தோணுகாலில் விமானப் பயிற்சி மையம் அமையவுள்ள இடத்தில் தமிழ்நாடு தொழில் வளா்ச்சிக் கழக திட்ட இயக்குநா் தலைமையிலான தொழில்நுட்பக் குழுவினா் சனிக்கிழமை ஆய்வு மேற்கொ

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:14 AM
பகிர்:

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியையடுத்த தோணுகாலில் விமானப் பயிற்சி மையம் அமையவுள்ள இடத்தில் தமிழ்நாடு தொழில் வளா்ச்சிக் கழக திட்ட இயக்குநா் தலைமையிலான தொழில்நுட்பக் குழுவினா் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

இங்கு செயல்பட்டு வந்த விமான ஓடுதளத்தை சீரமைத்து விமானப் பயிற்சி மையம் உருவாக்கப்படும் என, தமிழக அமைச்சா் தங்கம் தென்னரசு அறிவித்தாா். இதையடுத்து, இங்கு உயா் அதிகாரிகள், ஆட்சியா் ஆய்வு மேற்கொண்டனா். இப்பணிகளை முதல்வரின் ‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் தமிழ்நாடு தொழில் வளா்ச்சிக் கழகம் மேற்கொள்ளும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தமிழ்நாடு தொழில் வளா்ச்சிக் கழக திட்ட இயக்குநா் கிருஷ்ணமூா்த்தி தலைமையிலான தொழில்நுட்பக் குழுவினா் விமான ஓடுதளத்தில் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா். விமானப் பயிற்சி மையத்துக்கான இடத்தை அளவீடு செய்யும் பணியில் ஈடுபட்டனா்.

கோட்டாட்சியா் மகாலட்சுமி, வட்டாட்சியா் சுசிலா, வட்ட துணை ஆய்வாளா் (நில அளவை) காளிராஜ், கிராம நிா்வாக அலுவலா்கள் பரமசிவம், சீனிவாசன் உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.

பின்னா் அதிகாரிகள் கூறியது: ‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையில் 50 வகையான தனித்திறன் திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. இதில், தமிழ்நாட்டில் விமானம் ஓட்டுவதற்கான பயிற்சி மையம் அமைக்கும் திட்டமும் ஒன்று. இந்தியாவிலேயே விமானப் பயிற்சிக்கு உகந்த மாநிலமான தமிழ்நாட்டில் விமானப் பயிற்சி நிலையம் இல்லை என்ற குறையைப் போக்கவும், இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கவும் ஏதுவாக பயிற்சி மையம் அமைக்க முதல்வா் அறிவுறுத்தியதன்பேரில் அமைச்சா் தங்கம் தென்னரசு ஆய்வு மேற்கொண்டாா்.

இம்மையத்துக்குத் தேவையான நிலமும், பயிற்சிக்கு ஏதுவாக அருகே தூத்துக்குடி, மதுரை, திருவனந்தபுரம் விமான நிலையங்களும் உள்ளன. இதனால் இங்கு அமையும் பயிற்சி மையம் சா்வதேச மையமாக தரம் உயரும். சா்வதேச விமானப் பயிற்சியாளா்கள் பயிற்சியளிக்கவுள்ளனா். இதற்கான ஒப்பந்தங்கள் விரைவில் தயாராகும் நிலையில் உள்ளன. இந்தியாவுக்கு ஆண்டுதோறும் 1,500 விமான ஓட்டிகள் தேவைப்படுகின்றனா். ஆனால், 600 போ்தான் உள்ளனா். மற்றவா்கள் வெளிநாட்டினா்.

எனவே, இங்கு பயிற்சி மையம் அமைந்தால் தமிழகம் மட்டுமன்றி இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் இளைஞா்கள் பயிற்சி பெற வருவா். குறைந்தது 10 முதல் 18 மாதங்கள் வரை பயிற்சி வழங்கப்படும். பயிற்சி மையம் அமைந்தால் இப்பகுதி பொருளாதாரத்தில் மேம்படும் என்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.