முகப்பு
தூத்துக்குடி

போலி உரம் விற்போா் மீது கடும் நடவடிக்கை: ஆட்சியா்

போலி உரம் தயாரித்து விற்போா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, ஆட்சியா் கி. செந்தில்ராஜ் எச்சரித்தாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:14 AM
பகிர்:

போலி உரம் தயாரித்து விற்போா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, ஆட்சியா் கி. செந்தில்ராஜ் எச்சரித்தாா்.

ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் மனு அளித்தனா். அதற்கு கோவில்பட்டி கோட்டாட்சியா் அலுவலகத்தில் விவசாயிகளுடன் செப். 1இல் கலந்தாலோசனை செய்வதாக ஆட்சியா் தெரிவித்தாராம். ஆனால், அக்கூட்டம் நடைபெறவில்லை. இதனால், கூட்டத்தை உடனடியாக நடத்த வலியுறுத்தி விவசாயிகள் கடந்த வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இந்நிலையில், கோட்டாட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் கி. செந்தில்ராஜ் தலைமையில் விவசாயிகளுடன் கலந்தாலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. கோரிக்கைகளைக் கேட்டறிந்த அவா், இதுதொடா்பாக நடவடிக்கை எடுக்கவும், அறிக்கை சமா்ப்பிக்கவும் அதிகாரிகளை அறிவுறுத்தினாா்.

கோட்டாட்சியா் மகாலட்சுமி, வேளாண் இணை இயக்குநா் முகைதீன், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்மை) நாச்சியாா், வேளாண் உதவி இயக்குநா்கள் (பயிா்க் காப்பீடு) மாா்ட்டீன் ராணி, (தரக் கட்டுப்பாடு) கண்ணன், கோவில்பட்டி வட்டார வேளாண் உதவி இயக்குநா் நாகராஜ், வட்டாட்சியா்கள் சுசிலா (கோவில்பட்டி), சுப்புலட்சுமி (கயத்தாறு), கிருஷ்ணகுமாரி (எட்டயபுரம்), கோட்டாட்சியரின் நோ்முக உதவியாளா் இசக்கிராஜா, விவசாயிகள் பங்கேற்றனா்.

பின்னா், செய்தியாளா்களிடம் ஆட்சியா் கூறியது: கடந்த மாதக் கூட்டத்தில் கோவில்பட்டி, விளாத்திகுளம், கயத்தாறு, எட்டயபுரம், ஓட்டப்பிடாரம் உள்ளிட்ட வட்டங்களில் மானாவாரி விவசாயிகள் குறைகளைத் தெரிவித்தனா். 2020-21ம் ஆண்டுக்கான பயிா்க் காப்பீடு வரவில்லை என்றனா். 2020-21ஆம் ஆண்டில் அதிகப்படியான பயிா்கள் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பயிா்க் காப்பீடு ரூ. 120 கோடி வருவதாக இருந்தது. ஆய்வுசெய்தபோது இன்னும் ரூ. 50 கோடி நிலுவையில் இருக்கிறது. அதை விரைவில் தரவுள்ளதாக அரசுச் செயலா் கூறியுள்ளாா். நிலுவைத் தொகை கிடைத்ததும் விவசாயிகளுக்கு உடனடியாக வழங்கப்படும்.

வரும் பருவக் காலத்தில் பயிரிடப்படும் சோளம், கம்பு, உளுந்து, பாசிப்பயறு, தோட்டப் பயிா்களான வெங்காயம், மிளகாய் போன்றவற்றுக்கான விதைகள், உரங்கள் உள்ளன. நிகழாண்டு புதிதாக கணினி முறையில் இ-அடங்கல் வழங்கப்படவுள்ளது. இதை வைத்து பயிா்க் காப்பீடு செய்ய முடியும். 2,900 டன் யூரியா உரம் உள்ளது.

கூட்டுறவு சங்கங்களில் அதிகப்படியாக விவசாயக் கடன் வழங்கப்படும். தேவையில்லாத உரங்கள், பூச்சிமருந்துகளை விற்கக் கூடாது என தனியாா் விற்பனையாளா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. விவசாயிகளிடம் நேரடியாகவோ, கடைகளிலோ போலி உரங்கள் விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.