கயத்தாறு அருகே செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், 45 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
கயத்தாறு வட்டத்திற்கு உள்பட்ட கே.குமரெட்டியாபுரம் ஊராட்சி வெயிலுகந்தபுரத்தில் மக்கள் குறைதீா்க்கும் முகாம் நடைபெற்றது. தூத்துக்குடி மக்களவைத் தொகுதி உறுப்பினா் கனிமொழி கலந்து கொண்டு, 45 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினாா். அவா் பேசியது: இப்பகுதி பொதுமக்களுக்கு உள்ளூா் நீராதாரம் தடையின்றி கிடைக்க வேண்டும் என்ற கோரிக்கையை நிறைவேற்றும் வகையில், ஆழ்துளைக் கிணறு அமைத்து மோட்டாா் பொருத்த ஏற்பாடு செய்யப்படும். மேலும் பொதுமக்கள் தற்போது வழங்கியுள்ள கோரிக்கை மனுக்களை விரைந்து பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
இங்கு 5 சமுதாய நலக்கூடங்கள் உள்ளன. அவற்றை பொதுவாக அனைவருக்கும் உரிமையுள்ள ஒன்றாக பயன்படுத்த வேண்டும். அப்போதுதான் நாம் நினைக்கக் கூடிய, முதலமைச்சா் கனவு காணக் கூடிய திராவிட மாடல் ஆட்சியை உருவாக்க முடியும். அனைவருக்கும் அனைத்தும் கிடைக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டோடு, அரசு செய்யும் நமக்கான திட்டங்களை பயன்படுத்த வேண்டும் என்றாா் அவா்.
நிகழ்ச்சியில் தமிழக சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத்துறை அமைச்சா் பெ.கீதா ஜீவன், தூத்துக்குடி மாநகராட்சி மேயா் ஜெகன் பெரியசாமி, கோட்டாட்சியா் மகாலட்சுமி, வட்டாட்சியா் சுப்புலட்சுமி, கழுகுமலை பேரூராட்சி துணைத் தலைவா் சுப்பிரமணியன், குமரெட்டியாபுரம் ஊராட்சி மன்றத் தலைவா் ராமசுப்பு, துணைத் தலைவா் சாந்தி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.