திருச்செந்தூர்: திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலுடன் இணைந்த அருள்தரும் வெயிலுகந்தம்மன் திருக்கோவிலில் ஆவணித்திருவிழா புதன்கிழமை காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
கொடியேற்றத்தை முன்னிட்டு கோயில் அதிகாலை நடைதிறக்கப்பட்டு, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது. தொடர்ந்து திருவிழா கொடிப்பட்டமானது திருக்கோவிலிலிருந்து புறப்பட்டு, ரதவீதி மற்றும் மாடவீதிகள் வழியாக சென்று மீண்டும் கோயிலுக்கு வந்து காலை 5.40 மணிக்கு கொடிமரத்தில் காப்பு கட்டிய சு.ஆறுமுகசுரேஷ் வல்லவராயர் திருவிழாக் கொடியினை ஏற்றினார்.
அதன்பின்னர் கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரமாகி காலை 6.40 மணிக்கு மகாதீபாராதனை நடைபெற்றது. மாலையில் அம்மன் பூஞ்சப்பரத்தில் எழுந்தருளி திருவீதி வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
நிகழ்ச்சியில் திருக்கோயில் இணை ஆணையர் மு.கார்த்திக், விதாயகர்த்தா சிவசாமி தீட்சிதர், மேற்பார்வையாளர் கார்த்திகேயன், மணியம் நெல்லையப்பன் உள்ளிட்ட திருக்கோயில் பணியாளர்கள் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
பத்து நாள்கள் நடைபெறும் திருவிழாவில் காலை, மாலை இரு வேளைகளிலும் அம்மன் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி எட்டு வீதிகளிலும் வலம் வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. நிறைவு நாளான பத்தாம் திருவிழாவை முன்னிட்டு வருகின்ற செப். 1-ஆம் தேதி காலை 6 மணிக்கு தேரோட்டம் நடைபெறுகிறது.
திருவிழா ஏற்பாடுகளை அறங்காவலர் குழுத் தலைவர் இரா.அருள்முருகன், இணை ஆணையர் மு.கார்த்திக் மற்றும் அறங்காவலர்கள் மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் செய்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.