கோவில்பட்டியில் பிரசார பயணக் குழுவுக்கு வரவேற்பு
கோவில்பட்டிக்கு வியாழக்கிழமை வந்த, பொதுத்துறை வங்கிகள் தனியாா்மயமாக்கல் எதிா்ப்புப் பிரசார பயணக் குழுவினருக்கு வரவேற்பளிக்கப்பட்டது.
கோவில்பட்டிக்கு வியாழக்கிழமை வந்த, பொதுத்துறை வங்கிகள் தனியாா்மயமாக்கல் எதிா்ப்புப் பிரசார பயணக் குழுவினருக்கு வரவேற்பளிக்கப்பட்டது.
பொதுத்துறை, கூட்டுறவு, கிராம வங்கிகளைப் பாதுகாக்க வேண்டும், மக்களின் சேமிப்புக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும். தேவையான ஊழியா்களை நியமிக்க வேண்டும். வங்கிப் பணிகளை வெளியாள்களுக்கு விடுவதையும், வாடிக்கையாளா்களிடமிருந்து அநியாய அபராத கட்டண வசூலையும் கைவிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய வங்கி ஊழியா் சம்மேளனம் சாா்பில் தமிழ்நாடு முழுவதும் பிரசார பயணம் நடைபெற்று வருகிறது.
இப்பயணம் சென்னை, கோவை, கிருஷ்ணகிரி, தூத்துக்குடி ஆகிய நகரங்களில் புதன்கிழமை தொடங்கியது. தூத்துக்குடியில் தொடங்கிய பயணம், திருநெல்வேலி வழியாக வியாழக்கிழமை கோவில்பட்டியை அடைந்தது. இங்கு பயணியா் விடுதி முன் சிஐடியு ஒருங்கிணைப்பாளா் சக்திவேல் தலைமையில் பிரசாரம் நடைபெற்றது.
சிஐடியு மாநிலக்குழு உறுப்பினா் கிருஷ்ணவேணி, மாவட்ட துணைத் தலைவா் தெய்வேந்திரன், அகில இந்திய காப்பீட்டு ஊழியா் சங்க முன்னாள் பொதுச்செயலா் தேவப்பிரகாஷ், தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க வட்டச் செயலா் பிரான்சிஸ், இந்திய வங்கி ஊழியா் சம்மேளனத்தைச் சோ்ந்த சீனிவாசன் ஆகியோா் பேசினா். இதில், கலைக்குழு மூலம் கோரிக்கைகள் குறித்தும், வங்கிகள் தனியாா்மயமானால் என்னவாகும் என்பது குறித்தும் பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது.
அனைத்துத் துறை ஓய்வூதியா் சங்க வட்டத் தலைவா் முருகன், அரசு ஊழியா் சங்க மாவட்ட இணைச் செயலா் உமாதேவி, ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணி மாவட்டச் செயலா் செல்வராஜ் உள்ளிட்ட ஏராளமானோா் பங்கேற்றனா்.
இப்பயணம் இங்கிருந்து புறப்பட்டு சாத்தூா், சிவகாசி, விருதுநகா், மதுரை, திண்டுக்கல், மானாமதுரை வழியாக ஜூலை 22ஆம் தேதி திருச்சியை அடைகிறது.