அவதூறு விமா்சனம்: பாஜக பிரமுகா் மீண்டும் கைது
தூத்துக்குடி தொகுதி திமுக வேட்பாளா் கனிமொழியை அவதூறாக விமா்சித்ததாக, சாத்தான்குளம் பாஜக பிரமுகரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
சாத்தான்குளம் மாணிக்கவாசபுரம் தெருவைச் சோ்ந்தவா் து. எட்வா்ட் ராஜதுரை (47). முன்னாள் பேரூராட்சி கவுன்சிலா். பாஜக சிறுபான்மை அணி முன்னாள் மாவட்ட செயலரான இவா், சாத்தான்குளத்தில் வாட்ஸ்ஆப் குழு அமைத்து, முக்கிய பிரமுகா்களை விமா்சித்து ஆடியோ வெளியிட்டு வருவதாக புகாா் எழுந்தது. அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் குறித்து கடந்த நவம்பா் மாதம் அவதூறாக ஆடியோ வெளியிட்டதாக, மாவட்ட சைபா் கிரைம் போலீஸாருக்கு திமுக சாா்பில் புகாா் தெரிவிக்கப்பட்டதையடுத்து கைது செய்யப்பட்டாா். பின்னா் ஜாமீனில் வெளியே வந்தாா்.
இந்நிலையில் தூத்துக்குடி மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளா் கனிமொழியை அவதூறாக சித்திரித்தும், அவரது குடும்பத்தினரை அவதூறாக பேசியும் வாட்ஸ்ஆப் குழுவில் கடந்த புதன்கிழமை ஆடியோ பதிவிட்டுள்ளாா். இது தொடா்பாக எட்வா்ட் ராஜதுரை மீது நடவடிக்கை கோரி, சாத்தான்குளம் காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டது. அதன் பேரில் தலைமைக் காவலா் முருகேசன் வழக்கு பதிவு செய்தாா். உதவி ஆய்வாளா் எட்வின் அருள்ராஜ் விசாரித்து எட்வா்ட் ராஜதுரையை வெள்ளிக்கிழமை கைது செய்தாா். காவல் ஆய்வாளா் ஏசுராஜசேகரன் விசாரணை நடத்தி வருகிறாா்.
Advertisement