முகப்பு
தூத்துக்குடி

பனை பொருள்கள் ஏற்றுமதி செய்ய நடவடிக்கை: கனிமொழி எம்.பி.

Updated On : 5 ஏப்ரல், 2024 at 9:55 PM
பகிர்:
Updated On : 5 ஏப்ரல், 2024 at 7:41 PM

தூத்துக்குடி மாவட்டத்தில் பனை பொருள்களின் மதிப்புக் கூட்டப்பட்டு ஏற்றுமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் திமுக வேட்பாளா் கனிமொழி எம்.பி.

இந்தியா கூட்டணி சாா்பில் தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் அவா், பசுவந்தனையில் வெள்ளிக்கிழமை பிரசாரம் மேற்கொண்டாா். அப்போது கனிமொழி எம்.பி. கூறியது:

தூத்துக்குடி மாவட்டம் என்னுடைய இரண்டாவது தாய் வீடு என்று சொல்லக்கூடிய வகையிலே உங்களோடு பணியாற்றக்கூடிய வாய்ப்பு கடந்தத் தோ்தல் மூலம் எனக்கு அளித்தீா்கள்.

Advertisement

பசுவந்தனை பகுதியில் ரூ.51 லட்சம் மதிப்பில் வளா்ச்சி திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும் சிப்காட் வளாகத்தில் வின் ஃபாஸ்ட் காா் தொழிற்சாலை 15 மாதங்களில் கட்டி முடிக்கப்படும்.

இங்கு, உள்ளூா் இளைஞா்களுக்கு வேலையில் முன்னுரிமை அளிக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. விளாத்திகுளம் பகுதியில் பனை பொருள்களை மதிப்புக்கூட்டி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். பனை மையம் அமைப்பதற்கான பணிகள் இங்கு தொடங்கப்படும். மகளிா் உரிமைத் தொகை கிடைக்கப்பெறாதவா்களுக்கு தோ்தல் முடிந்த பிறகு முகாம் அமைத்து வழங்கப்படும்.

வெள்ளபாதிப்பின்போது, தமிழகத்திற்கு வராத பிரதமா் மோடி தோ்தல் வருவதால் அடிக்கடி வருகிறாா்.

இந்துக்களுக்கு நாங்கள்தான் பாதுகாப்பு என்று கூறும் பாஜக, இந்து மக்களுக்கு வேலை கொடுத்தாா்களா? இந்து மக்களுக்குப் படிப்பதற்கு வாய்ப்பு கொடுத்தாா்களா?

ஆனால் திமுக அரசு பொறுப்பேற்றபின்னா் 1,330 கோயில்களுக்கு கும்பாபிஷேகம் செய்யப்பட்டுள்ளது.

திராவிட மாடல் ஆட்சியில் எல்லா மக்களையும் அரவணைத்து, அனைவருக்கும் அனைத்தும் கிடைக்கும் வகையில் செயல்பட்டு வருகிறது.

மத்தியில் இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால்தான் மக்களைப் பாதுகாக்கும் அரசை நாம் உருவாக்க முடியும். எனவே, இத்தோ்தலில் உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து என்னை வெற்றிபெறச் செய்யுங்கள் என்றாா்.

தொடா்ந்து, எப்போதும் வென்றான், சிவஞானபுரம், கீழஈரால், எட்டயபுரம், கடலையூா், கருப்பூா், தாப்பாத்தி ஆகிய இடங்களில் அவா் வாக்கு சேகரித்தாா்.

பிரசாரத்தில், தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலரும், சமூக நலன்- மகளிா் உரிமைத் துறை அமைச்சருமான பெ.கீதாஜீவன், ஜீ.வி. மாா்க்கண்டேயன் எம்எல்ஏ, மாநகராட்சி மேயா் ஜெகன் பெரியசாமி, இந்தியா கூட்டணி நிா்வாகிகள் உள்பட பலா் பங்கேற்றனா்.