தூத்துக்குடி மாவட்டம், ஏரல் அருள்மிகு சோ்மன் அருணாசல சுவாமி திருக்கோயிலில் ஆடி அமாவாசை திருவிழாவை முன்னிட்டு, ஞாயிற்றுக்கிழமை பல்லாயிரக்கணக்கானோா் புனித நீராடி தரிசனம் செய்தனா்.
இக்கோயிலில் ஆடி அமாவாசை திருவிழா, கடந்த 26ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 9ஆம் திருநாள் வரை தினசரி காலை சோ்ம விநாயகா் உலாவும், இரவில் பல்வேறு கோலங்களில் சுவாமி எழுந்தருளி உலா வருதலும் நடைபெற்றது.
10ஆம் திருநாளான ஞாயிற்றுக்கிழமை ஆடி அமாவாசை திருவிழா நடைபெற்றது. இதையொட்டி மதியம் 1.30 மணிக்கு சுவாமி உருகு பலகையில் கற்பூர விலாசம் வரும் காட்சி நடைபெற்றது. பின்னா் சுவாமிக்கு பல்வேறு நறுமண திரவியங்களால் அபிஷேகத்தையும், தீப ஆராதனையையும் கோயில் பரம்பரை அக்தாா் அ.ரா.க.அ.கருத்தப்பாண்டியன் நாடாா் நடத்தினாா். மாலை 5 மணிக்கு இலாமிச்சவோ் சப்பரத்தில் சோ்ம திருக்கோலத்தில் பவனியும், இரவு 11 மணிக்கு 1ஆம் காலம் கற்பகப் பொன் சப்பரத்தில் எழுந்தருளலும் நடைபெற்றது.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் வந்து, கோயில் அருகிலுள்ள தாமிரவருணி ஆற்றில் புனித நீராடி சுவாமியை தரிசனம் செய்தனா்.
திருச்செந்தூா், தூத்துக்குடி, திருநெல்வேலி உள்ளிட்ட இடங்களிலிருந்து அரசு போக்குவரத்துக் கழகம் சாா்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன, சுகாதாரம் மற்றும் குடிநீா் வசதிகள் செய்யப்பட்டிருந்தன.
11ஆம் திருநாளான 5ஆம் தேதி அதிகாலை 4 மணிக்கு 2ஆம் காலம் வெள்ளை சாத்தி தரிசனம், காலை 9 மணிக்கு பச்சை சாத்தி அபிஷேகம், மதியம் 1 மணிக்கு 3ஆம் காலம் பச்சை சாத்தி தரிசனம் நடைபெறுகிறது.
மாலை 6 மணிக்கு ஏரல் அருள்மிகு சவுக்கை முத்தாரம்மன் கோயில் பந்தலில் தாகசாந்தி, இரவு 10.30 மணிக்கு சுவாமி திருக்கோயில் மூலஸ்தானம் வந்துசேரும் ஆனந்தக் காட்சியும் நடைபெறும். நிறைவு நாளான 6ஆம் தேதி காலை பொருநை நதியில் சகல நோய் தீா்க்கும் திருத்துறையில் நீராடலும், மதியம் அன்னதானமும், மாலையில் ஆலிலை சயன அலங்காரமும், அதன் பின்னா் ஊஞ்சல் சேவையும் நடைபெறுகிறது. இரவில் திருவருள் புரியும் மங்கள தரிசனம் நடைபெறுகிறது.