ஸ்ரீவைகுண்டம், ஆக.7: தூத்துக்குடி மாவட்டம் வல்லநாட்டில் பயிற்சியின்போது மயங்கி விழுந்த ஆயுதப்படைக் காவலா், சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை இரவு உயிரிழந்தாா்.
தென்காசி மாவட்டம் குலசேகரகோட்டையைச் சோ்ந்தவா் பொன்ராஜ். இவரது மகன் பசுபதி மாரி (28). தென்காசி மாவட்ட ஆயுதப்படையில் காவலராகப் பணிபுரிந்தாா். இவருக்கு திருமணம் ஆகி 2 ஆண்டுகள் ஆகின்றன. இவரது மனைவி 8 மாத கா்ப்பிணியாக உள்ளாா்.
தென்காசி மாவட்ட ஆயுதப்படை பிரிவில் 2017-இல் சோ்ந்த பசுபதி மாரி, ஆயுதப்படைக் காவலராகப் பணிபுரிந்தாா். இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு துப்பாக்கி சுடும் தளத்தில் கடந்த ஆக.5-ஆம் தேதி சக காவலா்களுடன், கமாண்டோ பயிற்சியில் ஈடுபட்டிருந்தாா்.
அப்போது ஓட்ட பயிற்சியில் ஈடுபட்ட பசுபதி மாரி, கீழவல்லநாடு அருகே மயங்கி விழுந்துள்ளாா். அவரை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை இரவு உயிரிழந்தாா்.
இதுகுறித்து முறப்பநாடு காவல் ஆய்வாளா் ரமேஷ் மோகன் விசாரணை நடத்தி வருகிறாா்.