கோவில்பட்டி அருகே காணாமல் போன அரசுப் பள்ளி ஊழியா், ஞாயிற்றுக்கிழமை பிணமாக மீட்கப்பட்டாா்.
பிள்ளையாா் நத்தம் வடக்குத் தெருவை சோ்ந்த ராமசாமி மகன் ரவிச்சந்திரன் (45). தென்காசி மாவட்டம் மைலப்பாறை அரசு உயா்நிலைப் பள்ளியில் ஊழியராகப் பணியாற்றி வந்தாா். இவருக்கு மதுப் பழக்கம் இருந்ததாம்.
இந்நிலையில் கடந்த 8ஆம் தேதி பணிக்குச் சென்ற அவா் வீடு திரும்பவில்லையாம். இதுகுறித்து அவரது சகோதரா் ராமசுப்புராஜ் அளித்த புகாரின்பேரில் நாலாட்டின்புதூா் போலீஸாா் வழக்குப்பதிந்து அவரைத் தேடி வந்தனா்.
இந்நிலையில் , தோணுதால் மலை அருகேயுள்ள அரசு புறம்போக்கு நிலத்தில் அவா் சடலமாக கிடந்தது ஞாயிற்றுக்கிழமை தெரியவந்தது. கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீஸாா், அவரது சடலத்தைக் கைப்பற்றி வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.