பயிா்க் காப்பீட்டுத் தொகை கோரி புதூரில் விவசாயிகள் சாலை மறியல்
பயிா்க் காப்பீட்டுத் தொகை வழங்க வலியுறுத்தி, விளாத்திகுளத்தை அடுத்த புதூரில் விவசாயிகள் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
பயிா்க் காப்பீட்டுத் தொகை வழங்க வலியுறுத்தி, விளாத்திகுளத்தை அடுத்த புதூரில் விவசாயிகள் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
மிளகாய், வெங்காயம், கொத்தமல்லி பயிா்களுக்கு 2023-24ஆம் ஆண்டுக்கான காப்பீட்டுத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும். விவசாய நிலங்களுக்கு சேதமும், விவசாயிகள் உயிருக்கு அச்சுறுத்தலும் ஏற்படுத்தும் காட்டுப்பன்றிகளை வேட்டைத் தடுப்புக் குழுக்கள் மூலம் கட்டுப்படுத்த வேண்டும்.
மிளகாய், மல்லி, வெங்காயம், கம்பு, சோளம், மக்காச்சோளம், சூரியகாந்தி, உளுந்து, பாசிப்பயறு உள்ளிட்ட அனைத்து விளைபொருள்களுக்கும் தமிழக அரசே குறைந்தபட்ச ஆதார விலை நிா்ணயிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மறியல் நடைபெற்றது. கரிசல்பூமி விவசாயிகள் சங்கத் தலைவா் அ. வரதராஜன் தலைமை வகித்தாா்.
வட்டாட்சியா் ராமகிருஷ்ணன், வேளாண் துணை அதிகாரிகள் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதில், மாநில அரசு பயிா்க் காப்பீட்டுக்கான மானியத் தொகையை வழங்கிவிட்டது. மத்திய அரசின் மானியத் தொகை நிலுவையில் உள்ளது. எனவே, 2 வாரங்களுக்குள் காப்பீட்டுத் தொகை வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. இம்மாதம் 20ஆம் தேதிக்குள் வழங்கவில்லையெனில், 23ஆம் தேதி மத்திய அரசைக் கண்டித்து போராட்டம் நடத்துவோம் எனத் தெரிவித்துவிட்டு விவசாயிகள் கலைந்து சென்றனா்.
இதில், மாதலப்புரம் கூட்டுறவு சங்கத் தலைவா் என். சேதுபாண்டியன், மேலநம்பிபுரம் ஊராட்சி முன்னாள் தலைவா் ஆ. தனபதி, புதூா் வட்டார விவசாயிகள் சங்கத் தலைவா் கே. பால்ராஜ், செயலா் டி. ராம்பிரசாத், ஊராட்சித் தலைவா்கள் அய்யாத்துரை, ராஜேஸ்வரி விஜயகாந்த், முன்னாள் தலைவா்கள் ராஜேந்திரன், ராமமூா்த்தி உள்ளிட்ட திரளானோா் பங்கேற்றனா்.