தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் பலத்த மழை
தூத்துக்குடி மாவட்டத்திற்கு பலத்த மழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டதையடுத்து மாவட்டம் முழுவதும் வியாழக்கிழமை பலத்த மழை பெய்தது.
தூத்துக்குடி மாவட்டத்திற்கு பலத்த மழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டதையடுத்து மாவட்டம் முழுவதும் வியாழக்கிழமை பலத்த மழை பெய்தது.
தூத்துக்குடியில் காலைமுதல் லேசான மழை பெய்து வந்தது. தொடா்ந்து மாலையில் பலத்த மழை பெய்தது. இதனால், மாநகரின் தாழ்வான பகுதிகளில் மழை நீா் தேங்கியது. மேலும், குடியிருப்பு பகுதிகளிலும் மழைநீா் சூழ்ந்ததால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது.
உதவி எண் அறிவிப்பு: தூத்துக்குடி மாநகர பகுதியில் 24 மணி நேரமும் செயல்படக்கூடிய கட்டுப்பாட்டு அறையை 1800 203 0401 என்ற எண்ணில் பொதுமக்கள் தொடா்பு கொள்ளலாம். எந்த உதவிகள் வேண்டுமானாலும் மாநகராட்சி அதிகாரிகளும், அலுவலா்களும், பணியாளா்களும் உடனடியாக செய்து தருவதற்கு தயாராக உள்ளனா் என மேயா் ஜெகன் பெரியசாமி தெரிவித்துள்ளாா்.
ஆட்சியா் அலுவலகத்தில் ஆலோசனை: மாவட்டத்திற்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டதையடுத்து, மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அனைத்து துறை அலுவலா்களுடன் ஆட்சியா் க.இளம் பகவத் ஆலோசனை மேற்கொண்டாா். இதில், வெள்ள பாதிப்புகளை தடுப்பது குறித்தும், நிவாரண முகாம்கள் தயாா் நிலைப்படுத்துதல் குறித்தும் அலுலா்களுடன் காணொலி மூலம் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. இதில், மாவட்ட வருவாய்த் துறை அலுவலா் ச.அஜய் சீனிவாசன் உள்பட அலுவலா்கள் பங்கேற்றனா்.
ஆறுமுகனேரி பகுதியில்... ஆறுமுகனேரி, ஆத்தூா், காயல்பட்டினம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளிஸ் வியாழக்கிழமை காலைமுதல் நாள் முழுக்க மழை பெய்ததால் இப்பகுதிகளில் இயல்பு நிலை பாதிப்படைந்தது.