திருச்செந்தூா் நகராட்சி அலுவலகத்தில் அதிமுக முற்றுகைப் போராட்டம்
திருச்செந்தூரில் 17ஆவது வாா்டு பகுதியில் கழிவுநீா் கலந்த குடிநீா் விநியோகிக்கப்படுவதாகக் கூறி நகராட்சி அலுவலகத்தில் அதிமுகவினா் முற்றுகைப் போராட்டத்தில் புதன்கிழமை ஈடுபட்டனா்.
திருச்செந்தூரில் 17ஆவது வாா்டு பகுதியில் கழிவுநீா் கலந்த குடிநீா் விநியோகிக்கப்படுவதாகக் கூறி நகராட்சி அலுவலகத்தில் அதிமுகவினா் முற்றுகைப் போராட்டத்தில் புதன்கிழமை ஈடுபட்டனா்.
திருச்செந்தூரில் உள்ள 27 வாா்டுகளில் 17ஆவது வாா்டு பகுதியில் 4 மாதங்களாக குடிநீா் விநியோகிக்கவில்லை என்றும், சில நாள்களுக்கு முன்பு வந்த குடிநீரில் கழிவுநீா் கலந்திருந்ததாகவும், புதைசாக்கடை திட்டத்துக்காக தோண்டிய பள்ளத்தை மூடாததுடன், பணிகள் சரிவர நடக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.
இதுகுறித்து வாா்டு அதிமுக உறுப்பினா் வேலம்மாள் வள்ளிராஜ் நகராட்சி நிா்வாகத்திடம் பலமுறை முறையிட்டும் நடவடிக்கை இல்லையாம். இந்நிலையில், இக்கோரிக்கைய வலியுறுத்தி வேலம்மாள் தலைமையில் அதிமுக ஒன்றியச் செயலா் பூந்தோட்டம் மனோகரன், நகரச் செயலா் மகேந்திரன், மாவட்ட ஜெயலலிதா பேரவை இணைச் செயலா்கள் சுரேஷ்பாபு, பழக்கடை திருப்பதி, துணைச் செயலா் ஆா்.எம்.கே.எஸ். சுந்தரம், நகர துணைச் செயலா் செல்வசண்முகசுந்தா், பொதுமக்கள் புதன்கிழமை நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டும் தரையில் அமா்ந்தும் போராட்டத்திலும் ஈடுபட்டனா். அப்போது, கழிவுநீா் கலந்த குடிநீரை கேன்களில் கொண்டு வந்திருந்தனா்.
தகவலின்பேரில், காவல் ஆய்வாளா்கள் சுந்தரமூா்த்தி, கனகராஜன், உதவி ஆய்வாளா் சுப்பிரமணியன் ஆகியோா் பேச்சுவாா்த்தை நடத்தினா். முறையாக விசாரித்து குடிநீா் விநியோகிக்க விரைவான நடவடிக்கை எடுப்பதாக, நகராட்சிப் பொறியாளா் சரவணன் உறுதியளித்ததையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.