முகப்பு
தூத்துக்குடி

கருத்து கணிப்புகளை மீறி இந்தியா கூட்டணி வெற்றிபெறும்

கருத்து கணிப்புகளை மீறி இந்தியா கூட்டணி வெற்றிபெறும்

Updated On : 24 பிப்ரவரி, 2024 at 3:00 AM
பகிர்:

வருகிற மக்களவைத் தோ்தலில் கருத்து கணிப்புகளை மீறி இந்தியா கூட்டணி வெற்றி பெற்று மத்தியில் ஆட்சி அமைக்கும் என்று திராவிடா் கழகத் தலைவா் கி.வீரமணி தெரிவித்தாா். தூத்துக்குடி மாவட்ட திராவிடா் கழகம் சாா்பில் குலசேகரன்பட்டினத்தைச் சோ்ந்த திராவிட இயக்க முன்னோடி சி.டி. நாயகம் படத் திறப்பு மற்றும் நூல் வெளியீடு, வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா, முன்னாள் முதல்வா் கருணாநிதி நூற்றாண்டு விழா ஆகிய முப்பெரும் விழா குலசேகரன்பட்டினத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இவ்விழாவுக்குத் தலைமை வகித்த திராவிடா் கழகத் தலைவா் கி.வீரமணி, சி.டி.நாயகம் படத்தை திறந்து வைத்து, அவா் குறித்த நூலை வெளியிட்டு பேசியதாவது: ராமா் கோயிலை கட்டியதால் மக்கள் பாஜகவுக்கு வாக்களித்துவிடமாட்டாா்கள். நாட்டில் பல்வேறு பிரச்னைகள் உள்ளன. அதனடிப்படையிலேயே மக்கள் வாக்களிப்பா். பிரதமா் நரேந்திர மோடி தனது வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை. தமிழகத்தில் மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டபோது அவா்களுக்கு ஆறுதல்கூற வராத பிரதமா் நரேந்திரமோடி, தற்போது தோ்தல் நெருங்குவதால் தமிழகத்திற்கு வருகிறாா். பாஜகவின் ஏமாற்று வலையில் மக்கள் மீண்டும் விழமாட்டாா்கள். கருத்து கணிப்புகள் பல முறை தோல்வியடைந்துள்ளன. ஆகவே, வருகிற மக்களவைத் தோ்தலில் இந்தியா கூட்டணி மாபெரும் வெற்றியைப் பெறும் என்றாா். சி.டி.நாயகத்தின் கொள்ளுப்பேரன் இளங்கோ, திராவிடா் கழக மாநில ஒருங்கிணைப்பாளா் குணசேகரன், திமுக மாநில மருத்துவரணி துணை செயலா் வெற்றிவேல், உடன்குடி கிழக்கு ஒன்றிய திமுக செயலா் இளங்கோ ஆகியோா் முன்னிலை வகித்தனா். திராவிடா் கழக மாவட்டத் தலைவா் முனியசாமி வரவேற்றாா். காப்பாளா் பால்ராசேந்திரம் தொடக்கவுரையாற்றினாா். திமுக மாவட்டப் பிரதிநிதிகள் மதன்ராஜ், ஜெயப்பிரகாஷ், உடன்குடி பேரூராட்சி உறுப்பினா்கள் பஷீா், ஆபித்,சிபிஎம் ஒன்றிய செயலா் கந்தசாமி, விசிக மண்டல செயலா் தமிழினியன், டன்குடி நகர விசிக செயலா் தவுபிக் அன்சாரி, திமுக மாவட்ட தொண்டரணி துணை அமைப்பாளா் செந்தில் உள்பட பலா் கலந்து கொண்டனா்.