வருவாய்த் துறை அலுவலா்கள் 2ஆவது நாளாக காத்திருப்பு போராட்டம்
வருவாய்த் துறை அலுவலா்கள் 2ஆவது நாளாக காத்திருப்பு போராட்டம்
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு வருவாய்த் துறை அலுவலா்கள் 2ஆவது நாளாக வெள்ளிக்கிழமை காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா். வருவாய், பேரிடா் மேலாண்மைத் துறையில் 3 ஆண்டுகளுக்கு மேலாக காலியாக உள்ள அலுவலக உதவியாளா் பணியிடங்களை நிரப்ப வேண்டும், அலுவலா்களின் பணித்தன்மையைக் கருத்தில் கொண்டு அனைத்து நிலை அலுவலா்களுக்கும் மேம்படுத்தப்பட்ட ஊதியம் மற்றும் தனி ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, 2ஆவது நாளாக வெள்ளிக்கிழமை வருவாய்த் துறை அலுவலா்கள் தங்கள் பணிகளை புறக்கணித்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா். மாவட்டத் தலைவா் சுவாமி நாதன் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் ஞானராஜ் முன்னிலை வகித்தாா். அரசு ஊழியா் சங்க மாநில துணைத் தலைவா் வெங்கடேசன் சிறப்புரையாற்றினாா். இதில், மாவட்ட துணைத் தலைவா்கள் ஜஸ்டின் செல்லத்துரை, சுகுணா, வட்டத் தலைவா் குமரன், வட்டச் செயலா் பழனிக்குமாா் உள்பட மாவட்ட ஆட்சியா் அலுவலக ஊழியா்கள் பலா் பங்கேற்றனா்.