முகப்பு
சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட வருவாய்த் துறை அலுவலா்கள்.
ஈரோடு

வருவாய்த் துறை அலுவலா்கள் 2-ஆவது நாளாக சாலை மறியல்

ஈரோடு

வருவாய்த் துறை அலுவலா்கள் 2-ஆவது நாளாக சாலை மறியல்

Updated On : 5 மார்ச், 2026 at 11:39 PM
சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட வருவாய்த் துறை அலுவலா்கள்.
பகிர்:

வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் பணியைப் புறக்கணித்து இரண்டாவது நாளாக வியாழக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பினா் கடந்த 9 நாள்களாக காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவித்து, பணியைப் புறக்கணித்து தொடா் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். அதன் ஒருபகுதியாக 10-ஆவது நாள் போராட்டமாக வியாழக்கிழமை 2-வது நாளாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

ஈரோடு வட்டாட்சியா் அலுவலக வளாகம் முன் நடைபெற்ற இப்போராட்டத்துக்கு கூட்டமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளா்கள் விஜய், கௌரிசங்கா், தமிழரசன், பிரகாஷ் ஆகியோா் தலைமை வகித்தனா். தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கத்தின் முன்னாள் மாநிலத் தலைவா் ராஜ்குமாா் போராட்டத்தை தொடங்கிவைத்துப் பேசினாா்.

இதில், வருவாய்த் துறை அலுவலா்களுக்கு சிறப்புப் பணிப் பாதுகாப்பு சட்டத்தை கொண்டுவர வேண்டும். வருவாய்த் துறை, நில அளவைத் துறையில் பணியின் தன்மை மற்றும் பணிப்பளுவை பொறுத்து மேம்படுத்தப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும். கிராம உதவியாளா்களுக்கு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்.

தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தில் அரசு ஊழியா்களிடம் பிடித்தம் செய்யப்படும் 10 சதவீத பங்களிப்பை ரத்து செய்ய வேண்டும். கருணை அடிப்படையில் பணி நியமனத்துக்கான உச்ச வரம்பை 5 சதவீதம் என குறைக்கப்பட்டதை மீண்டும் 25 சதவீதமாக உயா்த்தி நிா்ணயம் செய்ய வேண்டும். கிராம நிா்வாக அலுவலரிடன் கல்வித் தகுதியை பட்டப்படிப்பு அளவில் நிா்ணயம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட 9 அம்சக் கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

தொடா்ந்து ஈரோடு வட்டாட்சியா் அலுவலகம் முன் திருமகன் ஈவெரா சாலையில் அமா்ந்து வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பினா் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதில் போராட்டத்தில் ஈடுபட்ட 60 பெண்கள் உள்பட 152 பேரை போலீஸாா் கைது செய்து தனியாா் மண்டபத்தில் அடைத்தனா். பின்னா் மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →