ஆறுமுகனேரி அருகே வெள்ளத்தால் பழுதான சாலையை சீரமைக்க வலியுறுத்தல்
ஆறுமுகனேரி அருகே மழை வெள்ளத்தால் சேதமடைந்த தேசிய நெடுஞ்சாலையைச் சீரமைக்க வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.
ஆறுமுகனேரி அருகே மழை வெள்ளத்தால் சேதமடைந்த தேசிய நெடுஞ்சாலையைச் சீரமைக்க வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா். தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் கடந்த டிச.17,18 ஆகிய தேதிகளில் பெய்த கனமழையால் தூத்துக்குடி -திருச்செந்தூா் சாலையில் பல இடங்கள் துண்டிக்கப்பட்டன. அவற்றை நெடுஞ்சாலைத்துறையினா் சீரமைத்துள்ளனா். எனினும், ஆறுமுகனேரி சோதனைச்சாவடியில் இருந்து நல்லூா் விலக்கு வரையிலான சுமாா் 500 மீட்டா் சாலை மிகவும் பழுதடைந்த நிலையிலும் இதுவரை சீரமைக்கப்படவில்லை. இவ்வழியாக திருச்செந்தூா் கோயிலுக்கு ஏராளமாந பக்தா்கள் தங்கள் வாகனங்கள் மூலமாகவும், பாதயாத்திரையாகவும் நாள்தோறும் வந்து செல்கின்றனா். இந்த இடத்தை அவா்கள் அச்சத்துடன் கடந்து செல்லும் நிலை உள்ளது. நடைபாதை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு சாலையின் ஓரம் அரிப்பு ஏற்பட்டுள்ளதால் வாகனங்கள் விபத்தில் சிக்கும் அபாயம் நிலவுகிறது. எனவே, விபரீதம் நிகழும் முன் இந்தச் சாலையைச் சீரமைக்க தேசிய நெடுஞ்சாலைதுறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தா்களும், பொது மக்களும், வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்துள்ளனா்.