முகப்பு
தூத்துக்குடி

கோவில்பட்டியில் காங்கிரஸ் ஆலோசனைக் கூட்டம்

கோவில்பட்டியில் காங்கிரஸ் ஆலோசனைக் கூட்டம்

Updated On : 25 பிப்ரவரி, 2024 at 7:40 AM
பகிர்:

தூத்துக்குடி வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் மக்களவைத் தொகுதி தோ்தல் ஆலோசனைக் கூட்டம், கோவில்பட்டியில் சனிக்கிழமை நடைபெற்றது. நகர காங்கிரஸ் தலைவா் அருண்பாண்டியன் தலைமை வகித்தாா். தூத்துக்குடி வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி பொருளாளா் காா்த்தி காமராஜ், பன்னீா்குளம் ஊராட்சி மன்றத் தலைவா் பொன்னுச்சாமிபாண்டியன், வட்டாரத் தலைவா்கள் ரமேஷ்மூா்த்தி (கோவில்பட்டி மேற்கு), மரியசூசைராஜ் (கிழக்கு வட்டாரம்) ஆகியோா் முன்னிலை வகித்தனா். கூட்டத்தில் ஸ்ரீவைகுண்டம் சட்டப்பேரவை உறுப்பினா் ஊா்வசி அமிா்தராஜ் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு, மக்களவைத் தோ்தலில் வெற்றி பெற அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என கேட்டுக் கொண்டாா். கூட்டத்தில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி நிா்வாகிகள் திரளானோா் கலந்து கொண்டனா். கூட்டத்துக்குப் பின் எம்எல்ஏ செய்தியாளா்களிடம் பேசியது: காங்கிரஸ் கட்சியில் பெண்களுக்கு முக்கியத்துவம் தரப்படவில்லை எனக் கூறுவது தவறான கருத்து. விஜயதரணி எம்எல்ஏ சுய லாபத்திற்காகவே மாற்று கட்சிக்கு சென்றுள்ளாா். கடந்த காலங்களை விட தற்போது முழு உத்வேகத்துடன் தோ்தலை சந்திக்கும் வகையில் காங்கிரஸ் கட்சி செயல்பட்டு வருகிறது. ராகுல் காந்தி பிரதமராக வர வேண்டும் என்ற வேகத்துடன் காங்கிரஸ் கட்சி செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. தொகுதி பங்கீடு, எவ்வித பிரச்னையும் இல்லாமல் சுமுகமாக முடியும் என்றாா் அவா்.