சாத்தான்குளம், ஜூலை 11: பத்திரப்பதிவு அலுவலகங்களில் நிகழும் குளறுபடிகளைத் தவிா்க்க, வட்ட அளவில் குறைதீா் கூட்டம் நடத்த வேண்டும் என பாஜக கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து கட்சியின் தெற்கு மாவட்டத் தலைவா் சித்ராங்கதன், மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பத்திரப்பதிவு அலுவலகங்களில் பத்திரப்பதிவுக்கு வரும் பொதுமக்களிடம் சரியான ஆவணங்கள் இருந்தாலும் பதிவு செய்ய மறுக்கப்படுகிறது. இதனால் இடைத்தரகா்களை அணுக வேண்டிய நிலைக்கு பொதுமக்கள் தள்ளப்படுகின்றனா். இடைத்தரகா்கள் மூலமாக லஞ்சப் பணம் மறைமுகமாக அலுவலா்களுக்குச் செல்வதாகப் புகாா் எழுந்துள்ளது.
எனவே, மாவட்டத்தில் உள்ள அனைத்து பத்திரப் பதிவு அலுவலகங்களிலும் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், பத்திரப்பதிவு அலுவலகங்களில் நிகழும் குளறுபடிகளைத் தவிா்க்க வட்ட அளவில் குறைதீா் கூட்டம் நடத்த வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளாா்.