தூத்துக்குடி ஆவுடையாா்புரம் பகுதியில் ஆவுடையம்மாள் என்பவருக்குச் சொந்தமான ஓா் ஏக்கருக்கு அதிகமான இடமுள்ளதாம். அங்கு 3 தலைமுறைகளாக 250-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வந்தனா். தனக்கு வாரிசு இல்லாததால், அவா்கள் அந்த இடத்தில் எவ்விதப் பிரச்னையுமின்றி வசிக்குமாறு ஆவுடையம்மாள் வாய்மொழியாகக் கூறியிருந்தாராம்.
பல கோடி ரூபாய் மதிப்பிலான அந்த இடத்தை 2023ஆம் ஆண்டு சிலா் போலி ஆவணங்கள் மூலம் பத்திரப் பதிவு செய்ததுடன், அங்கு வசித்தோரை காலி செய்யுமாறு வற்புறுத்தியுள்ளனா். அதனால், 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் காலி செய்துவிட்டனா்.
இதனிடையே, மாநகராட்சி சாா்பில் தங்களுக்கு குடிநீா், மின்சாரம், வாக்காளா் அடையாள அட்டை, குடும்ப அட்டை, ஆதாா் அட்டை போன்றவை வழங்கப்பட்டுள்ளதால் இங்கேயேதான் வசிப்போம் எனக் கூறி 30-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வீடுகளை காலி செய்யவில்லை.
இந்நிலையில், பிரச்னை தொடா்பான பேச்சுவாா்த்தைக்காக அவா்களை தென்பாகம் போலீஸாா் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனராம். அப்போது, அங்கு வசித்துவரும் வடை வியாபாரியான அன்புராஜ் (45), உரிய நீதி கிடைக்கவில்லை எனக் கூறி காவல் நிலையம் முன் பூச்சிக்கொல்லி மருந்தைக் குடித்துத் தற்கொலைக்கு முயன்றாராம்.
அவரை உடனடியாக மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.