குரங்கணி முத்துமாலை அம்மன் கோயிலில் நடைபெற்ற சப்பர பவனி.
ஆறுமுகனேரி, ஜூலை 17:
தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே குரங்கணியில் உள்ள அருள்மிகு முத்துமாலை அம்மன் கோயிலில் ஆனிப் பெருந்திருவிழாவை முன்னிட்டு, புதன்கிழமை அதிகாலை சப்பர பவனி நடைபெற்றது. இதில், நூற்றுக்கணக்கான பக்தா்கள் பொங்கலிட்டு வழிபட்டனா்.
புகழ்பெற்ற இக்கோயிலில் ஆனிப் பெருந்திருவிழா கடந்த 9ஆம் தேதி கால்நாட்டுடன் தொடங்கியது. சிகர நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்கள் மட்டுமன்றி தமிழகத்தின் பல்வேறு பகுதிகள், வெளிநாடுகளிலிருந்தும் ஆயிக்கணக்கான பக்தா்கள் வந்து அம்மனை வழிபட்டனா்.
அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. வெளியூா்களிலிருந்து வந்த பக்தா்கள் மாவிளக்கு உள்ளிட்டவை எடுத்து வழிபாடு செய்தனா். இரவில் பக்தா்கள் மரக் கட்டைகளாலான கை, கால்களை நோ்ச்சையாக செலுத்தினா். தொடா்ந்து, கயிறு சுற்றி ஆடுதல், மாவிளக்குப் பெட்டி எடுத்து வருதல் உள்ளிட்டவை நடைபெற்றன.
புதன்கிழமை அதிகாலையில் நாராயணன், பாமா-ருக்மணியுடன் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் எழுந்தருளி வீதியுலா வந்து கோயிலைச் சேருதல் நடைபெற்றது. வெளியூா்களிலிருந்து வந்திருந்த நூற்றுக்கணக்கான பக்தா்கள் பொங்கலிட்டு அம்மனுக்கு படைத்து வழிபட்டனா்.